பத்திரிகை படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்: சைலேந்திரபாபு பேச்சு

மேட்டுப்பாளையம்; ‘பத்திரிகை படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என, தமிழக முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திர பாபு பேசினார்.மேட்டுப்பாளையம் மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின், 50 ஆண்டை முன்னிட்டு பொன் விழா நடந்தது.

விழாவுக்கு பள்ளி தாளாளர் சித்துராம் தலைமை வகித்தார். சேர்மன் தியாகராஜன் வரவேற்றார். பொருளாளர் வீராசாமி, தலைவர் சாந்தமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திர பாபு பங்கேற்று பேசியதாவது:பெற்றோர்களின் கனவை மாணவர்கள் நிறைவேற்ற வேண்டும். உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு மொழியும், வாசிப்பும் ஆகும். எதிர்காலத்தில் விஞ்ஞானம் தான் எதையும் செய்யும். மாணவர்கள் படிப்பதற்கு அதிக நேரம் செலவிடுவதை விட, ஆராய்ச்சியிலும், கண்டுபிடிப்பிலும் ஈடுபட வேண்டும். மாணவர்கள் ரோல் மாடலாக இருக்க வேண்டும். டி.வி., பார்ப்பதையும், போன் பேசுவதையும் குறைக்க வேண்டும்.

உங்கள் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தமிழ், ஆங்கிலம் பத்திரிகை வாங்கி, தினமும் படிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ரோட்டரி மாவட்ட கவர்னர் தனசேகர் உட்பட பலர் பேசினர். விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி முதல்வர் சுலோச்சனா நன்றி கூறினார்.

பின்பு சைலேந்திர பாபு நிருபர்களிடம் கூறுகையில், சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. உங்களை ஏமாற்றும் நோக்குடன், ஆசை வார்த்தை கூறுவர். அது உண்மையா என, விசாரணை செய்ய வேண்டும்.

மாணவர்கள் ஒரு மணி நேரம் மட்டுமே மொபைல் போன் பயன்படுத்த வேண்டும். மற்ற நேரங்களை போட்டி தேர்வுகளுக்கு பயன்படுத்த வேண்டும்.’ இவ்வாறு அவர் கூறினார்.