கோவை; வேகமாக செல்லக்கூடிய விலை உயர்ந்த மோட்டார் பைக்குகள் திருட்டு கோவையில் அதிகமாகி வருவதால், போலீசார் கவலை அடைந்துள்ளனர். செயின் பறிப்பு முதல் நகை கொள்ளை வரை குற்றங்கள் செய்வதற்காக இந்த பைக்குகள் திருடப்படுவதால், இதற்கு முடிவு கட்டுவது எப்படி என்று, உயர் அதிகாரிகள் யோசனையில் ஆழ்ந்துள்ளனர்.கோவையில் பெரும்பாலான வீடுகளில் வாகன நிறுத்தம் கிடையாது. அவ்வாறு இருந்தாலும், வசதிக்காக வீட்டு முன் வாகனங்களை நிறுத்துகின்றனர். அபார்ட்மென்ட்ஸ் எனப்படும் ஒருங்கிணைந்த வீடுகள் என்றால், கார்களை பார்க் செய்ய மட்டுமே இடம் உள்ளது. டூவீலர்களை ரோட்டில் நிறுத்துகின்றனர்.

இவ்வாறு பாதுகாப்பு இல்லாமல், நிறுத்தப்படும் வாகனங்களை இரவில் சுலபமாக திருடி செல்கின்றனர். விலை உயர்ந்த, அதிக திறன் கொண்ட பைக்குகள் தான், கேடிகளின் இலக்காக உள்ளது.
திருடப்படும் பைக்குகள், செயின் பறிப்பு முதல் நகை கொள்ளை வரையிலான குற்றங்களில் ஈடுபட, பயன்படுத்தப்படுகிறது. ஒரு சில பைக்குகள் மட்டுமே, தனித்தனியாக பிரித்து விற்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன் ஒண்டிபுதுார் கம்பன் நகரில், ஒரு சூப்பர் பைக்கை சிலர் திருடும் காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி வலைதளங்களில் பரவியது. இப்படி நகரம் முழுவதும் பைக் திருட்டு நடக்கிறது.
திருடர்கள் முகமூடி அல்லது ஹெல்மெட் அணிந்திருப்பதால், கேமரா பதிவு கிடைத்தாலும், அவர்களை அடையாளம் காண முடிவதில்லை.
கடந்த ஆண்டில், 333 பைக்குகள் திருடு போயின. அதில் 212 பைக்குகளை, போலீசார் மீட்டுள்ளனர். இவை பெரும்பாலும் ஆங்காங்கே விட்டு செல்லப்பட்டவை.
நடப்பாண்டில் இதுவரை, 165 பைக்குகள் திருடு போனதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில் 92 பைக்குகள் திரும்ப கிடைத்தன. அவற்றை திருடியதாக, இந்தாண்டு 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2024ல் பைக் திருட்டில் ஈடுபட்டதாக, 289 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரே நபர், பல பைக்குகளை திருடுவதால் கைது எண்ணிக்கை குறைவாக உள்ளதாக, போலீசார் கூறினர். மார்ச் மாதம் சிக்கிய ஒரு ஆசாமி, 14 பைக்குகளை திருடியதாக ஒப்புக் கொண்டதை, உதாரணம் காட்டுகின்றனர்.
உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘பெரும்பாலும் வேறு பெரிய குற்றம் செய்வதற்காக, பைக் திருடுகின்றனர். அந்த குற்றத்தை செய்து முடித்ததும், பைக்கை எங்காவது நிறுத்தி சென்று விடுகின்றனர். பலர் பார்க்கிங் தேடி சென்று, பைக்கை நிறுத்துகின்றனர். திருடு போனதை உடனே போலீசில் சொல்லாமல், ஒரு மாதம் வரை தாமதமாக புகார் கொடுப்பவர்களும் உண்டு. இதனால் எங்கள் வேலை கடினமாகிறது’ என்றார்.
ஒவ்வொரு பைக் திருட்டுக்கும் பின்னால், அதைவிட பெரிய குற்றம் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதால், பைக் திருட்டுக்கு முடிவு கட்ட, தீவிர யோசனையில் இருப்பதாக அவர் சொன்னார். தவிர்க்க முடியாமல் வீட்டுக்கு வெளியே டூவீலரை நிறுத்தினால், கூடுதலாக செயின் பூட்டுகள் போட வேண்டும் என்பது, அவருடைய ‘அட்வைஸ்’.
Leave a Reply