கோவை; மாநிலம் முழுவதும், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் கடந்த, 2ம் தேதி துவங்கியது. கோவையில் நடந்த முகாமில், 1,385 பேர் பல்வேறு பரிசோதனைகள் செய்துள்ளனர். இரண்டாம் கட்ட முகாம், 9ம் தேதி போளுவாபட்டி அரசு பள்ளியில் நடைபெறவுள்ளது.ஒவ்வொரு சனிக்கிழமையும், குறிப்பிட்ட பகுதியில் முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட அடிப்படை பரிசோதனை முதல், இதயம், நுரையீரல், நரம்பு, பல், கண் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட முகாமில், ரத்த பரிசோதனை 977 பேருக்கும், இ.சி.ஜி., 344, எக்ஸ்ரே 165, அல்ட்ரா சவுண்ட் 78, எக்கோ 105 பேருக்கும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை 90 பேருக்கும், கண் பரிசோதனை 372 பேர், காது – மூக்கு – தொண்டை 450 பேர், பல் பரிசோதனை 500 பேருக்கும், எலும்பு 84, நரம்பு 50, உளவியல் 18, தோல் 148, குழந்தைகள் மருத்துவம் 41, நுரையீரல் 28 பேர், அறுவை சிகிச்சை சம்பந்தமாக 64, பிசியோதெரபி 77 பேர் பரிசோதனை செய்துள்ளனர்.

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமியிடம் கேட்டபோது, ” கடந்த வாரம் நடந்த முகாமில், 1,385 பேர் பயன்பெற்றனர்.
”தொழிலாளர் நலவாரியம் சார்பில், 683 பேர், துாய்மை பணியாளர்கள் 86 பேர் பங்கேற்றனர். 78 பேருக்கு முதல்வர் காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. 120 மாற்றுத்திறனாளிகளுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இம்முகாம் வாயிலாக, குறைபாடுகள், அறிகுறிகள் கண்டறியப்பட்ட நபர்களை, தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளிக்கப்படும். இரண்டாம் கட்ட முகாம், 9ம் தேதி நடைபெறவுள்ளது,” என்றார்.
Leave a Reply