பாதியில் நின்ற 9,217 குழந்தைகளுக்கு மீண்டும் படிப்பு வழங்க கல்வித்துறை தீவிர முயற்சி

கோவை: தமிழகத்தில், கல்வியாண்டில் பள்ளி செல்லாத குழந்தைகளை, கணக்கெடுக்கும் பணி, ஆக.,1 முதல் நடைபெற்று வருகிறது. ஒரு குழந்தை 30 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு செல்லவில்லை என்றால், அவர்களின் விவரங்கள், எமிஸ் தளத்தில் பதிவாகும். அதன்படி, கோவை மாவட்டத்தில் 9,217 குழந்தைகள் பதிவாகியுள்ளனர். இதில், அரசு பள்ளிகளில் 3,704 பேர்; சி.பி.எஸ்.இ., மெட்ரிக், தனியார் பள்ளிகளில் 5,513 மாணவர்கள், பள்ளி செல்லாத குழந்தைகளாக, அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் அரசு பள்ளிகள் – 1,210, அரசு உதவிபெறும் பள்ளிகள் – 177, சுயநிதி பள்ளிகள் – 678, மத்திய பள்ளிகள் – 4 என மொத்தம் 2,069 பள்ளிகள் செயல்படுகின்றன. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

23 பேர் மீண்டும் சேர்ப்பு கோவை நகரம், பேரூர், சூலூர், எஸ்.எஸ்.குளம், பெரியநாயக்கன்பாளையம், மதுக்கரை, காரமடை உள்ளிட்ட 15 வட்டாரங்களில், கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் என மொத்தம் 108 பேர் இதில் ஈடுபட்டுள்ளனர்.

1,640 மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, காரணம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் 23 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாணவர்களின் தொடர்பு எண், முகவரி அடிப்படையில், நேரில் சென்று அக்கம் பக்கத்து வீட்டினரிடம் விசாரித்து, அவர்களின் நிலையை அறிந்து வருகிறோம்.
மாணவர்களின் குடும்பத்தினர் வேறொரு மாவட்டத்திற்கு சென்றிருந்தால், அங்கு வேறு பள்ளியில் சேர்ந்ததை உறுதி செய்து, எமிஸ் தளத்தில் விவரங்களை பதிவேற்றுவோம்.விவரம் சேகரிப்பு தீவிரம் பிற மாநிலங்களுக்கு சென்ற மாணவர்களை, தொடர்பு கொள்ள முடியாத சூழல் உள்ளது. அங்குள்ள பள்ளிகளில் அவர்கள் சேர்ந்தார்களா என்பதை, கண்காணிக்க இயலாது. ஏனெனில் பிற மாநிலங்களில் எமிஸ் வசதி இல்லை.

சுயநிதி பள்ளிகளில் பள்ளி செல்லாத குழந்தைகளாக அடையாளம் காணப்பட்டவர்கள், பொதுவாக கல்வியைத் தொடரும் வாய்ப்பு அதிகம்.

அவர்கள் பிற மாநிலம் அல்லது வெளிநாடு செல்லும் சாத்தியமும் உள்ளது. அத்தகைய மாணவர்களின் விவரங்களை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடமிருந்து சேகரித்து வருகிறோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

பிற மாநிலங்களுக்கு சென்ற மாணவர்களை, தொடர்பு கொள்ள முடியாத சூழல் உள்ளது. அங்குள்ள பள்ளிகளில் அவர்கள் சேர்ந்தார்களா என்பதை, கண்காணிக்க இயலாது. ஏனெனில் பிற மாநிலங்களில் எமிஸ் வசதி இல்லை.

முக்கிய காரணங்கள் தற்போது நடைபெறும் கணக்கெடுப்பில், மருத்துவ மற்றும் குடிபெயர்வு காரணங்களால் மாணவர்கள், பள்ளி செல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. 2024-2025ல் பள்ளி செல்லாத குழந்தைகளாக அடையாளம் காணப்பட்டவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்படுகின்றன. அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும், 2025-2026 கல்வியாண்டில் சேர்க்கை பெற்ற மாணவர்களின் விவரங்களும், சரிபார்க்கப்பட்டு வருகின்றன.