‘ஏற்றுமதியாளர்களுக்கு அரசு பக்கபலமாக இருக்கும்’

கோவை; எம்.எஸ்.எம்.இ., மேம்பாடு மற்றும் வசதியாக்கல் அலுவலகம் கோவை கிளை மற்றும் இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பான ‘பியோ’ சார்பில், ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த தேசிய கருத்தரங்கு, ஆவாரம்பாளையம் கோ — இண்டியா வளாகத்தில், நேற்று நடந்தது.

வெளிநாட்டு வர்த்தக இயக்குனரக கோவை இணை இயக்குனர் ஆனந்த் மிஸ்ரா பேசுகையில், ”இந்திய ஏற்றுமதியை, 2030ல் சரக்கு மற்றும் சேவை என இரு பிரிவுகளிலும், தலா ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது முறையே 440 மற்றும், 340 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி உள்ளது.

உலக ஏற்றுமதி சந்தையில், இந்தியாவின் பங்களிப்பு வெறும் 1.8 சதவீதம். சீனாவின் பங்களிப்பு 16 சதவீதம். எனவே, ஏற்றுமதியை அதிகரிக்க நமக்கு நல்ல வாய்ப்புள்ளது. கோவையில் உள்ள எம்.எஸ்.எம்.இ.,க்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.

ஏற்றுமதியில் அடுத்த கட்டம் எம்.எஸ்.எம்.இ., மேம்பாடு மற்றும் வசதியாக்கல், சென்னை இணை இயக்குனர் சுரேஷ் பாபுஜி தலைமை வகித்து பேசியதாவது:

எம்.எஸ்.எம்.இ., துறையில் ஏற்றுமதியை அதிகரிக்க, மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

உதாரணமாக, ஐ.இ., கோடு வாங்கி, முதலாண்டுக்குள் ஏற்றுமதி செய்தால், ஆர்.சி.எம்.சி., காப்பீடு, ஏற்றுமதிச்சான்று போன்றவற்றுக்கான கட்டணத்தை திருப்பித் தருகிறோம்.
தவிர, பல்வேறு துறைகளுடன் இணைந்து, ஏற்றுமதி வாய்ப்புகளை பெற்றுத் தருகிறோம்.

எம்.எஸ்.எம்.இ.,களின் ஏற்றுமதி திறனை அதிகரிக்க, அவற்றை மறுவரையறை செய்துள்ளது மத்திய அரசு.

லீன், இஸட் திட்டம், பல்வேறு நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் என, ஏற்றுமதியை ஊக்குவிக்க, அரசு ஏராளமான திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறது. ஏற்றுமதியாளர்களுக்கு அரசு பக்கபலமாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஏற்றுமதி வாய்ப்புகளை ஆய்தல், இ- – காமர்ஸ் துறையில் ஏற்றுமதி வாய்ப்பு, ஏற்றுமதி கடன் உத்தரவாத கழக திட்டங்கள், அஞ்சலகத்தில் ஏற்றுமதி வாய்ப்பு, எம்.எஸ்.எம்.இ., மேம்பாட்டு ஆணையரக திட்டங்கள் குறித்து, தனித்தனி அமர்வுகளில் விளக்கப்பட்டது.

எம்.எஸ்.எம்.இ., மேம்பாடு மற்றும் வசதியாக்கல் மைய கோவை கிளை உதவி இயக்குனர்கள் கயல்விழி, ராஜேந்திரன், சபரிகிரி, ‘பியோ’ கோவை தலைவர் சுவாமிநாதன் உட்பட தொழில்முனைவோர் பங்கேற்றனர்.