வீடு ஒதுக்கியாச்சு; சாவி எப்ப கொடுப்பாங்க? பணம் செலுத்திய பயனாளிகள் கேள்வி

வால்பாறை; திராவிட மாடல் ஆட்சியில் தொகுப்பு வீட்டிற்கு பணம் கட்டியும் வீடு வழங்காததால் பயனாளிகள் விரக்தியில் உள்ளனர்.கோவை மாவட்டம், வால்பாறையில், குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது, 80 வீடுகள் கட்டும் பணி துவங்கியது. ஆமை வேகத்தில் பணி நடந்தாலும், 500க்கும் மேற்பட்ட மக்கள் வீடு கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

தொகுப்பு வீடு தேவைப்படுவோர் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இந்நி லையில், மொத்தம் உள்ள 80 வீடுகளுக்கு, 31 பயனாளிகள் தலா ஒரு லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளனர். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் வீடு வழங்கப்படாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.பயனாளிகள் கூறுகையில், ‘வால்பாறையில் கடந்த ஜூன் மாதம் நடந்த அரசு விழாவில், 22 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்து அரசாணை வழங்கினர். ஆனால், இன்று வரை வீட்டின் சாவி கூட வழங்கவில்லை. இதனால் வாடகை வீட்டில் வசிக்கும் நாங்கள், வீட்டை காலி செய்ய முடியாமலும், அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்ல முடியாமலும் தவிக்கிறோம்’ என்றனர்.

குடிசை மாற்றுவாரிய உதவி பொறியாளர் மகேஷ்சங்கரிடம் கேட்ட போது, ”வால்பாறை மலைப் பகுதி மக்களுக்காக அரசின் சார்பில் மொத்தம், 80 வீடுகள் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. மழை காரணமாக பணிகளில் தாமதம் ஏற்பட்டது. ஆற்றோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக கட்டப்பட்ட குடியிருப்புக்கு அவர்கள் வர மறுப்பதால், வீடு இல்லாத வறுமை கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படுகிறது.

மொத்தம் உள்ள 80 வீடுகளுக்கு, இது வரை, 31 பயனாளிகள் மட்டுமே பணம் செலுத்தி பெயரை பதிவு செய்துள்ளனர். பணி நிறைவடைந்த பின், வரும் அக்.மாதம் இறுதியில் இந்த பயனாளிகளுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.