கோவை: கோவை மாவட்டம், நெல்லித்துறை அருகே உள்ள கடமான்கோம்பை கிராமத்தில் ரூ.2.5 கோடி மதிப்பில் சாலை அமைக்க அரசிடம் அனுமதி கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என்றும், குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பானவர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த நெல்லித்துறை என்ற பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த ஒருவரின் உடல் டோலி கட்டி தூக்கிச் செல்லப்பட்டது. இதுதொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.
தமிழகம் முழுவதும் சாலை வசதி இல்லாத மலைக் கிராமங்களுக்கு சாலைகள் அமைத்து தர வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தினர். இந்நிலையில், கோவை மாவட்டம், நெல்லித்துறை அருகே உள்ள கடமான்கோம்பை கிராமத்தில் ரூ.2.5 கோடி மதிப்பில் சாலை அமைக்க அரசிடம் அனுமதி கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என்றும், குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பானவர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த நெல்லித்துறை ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட பழங்குடி கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் முறையான எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாத அவல நிலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கடமான் கோம்பை பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னாள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து கொண்டு சென்ற நிலையில், நீராடி என்ற இடத்தில் இருந்து கடமான் கோம்பை வரை சாலை வசதி இல்லாத காரணத்தால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியின் நடுவே டோலி கட்டி உடல் தூக்கி செல்லப்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து, கோவை ஆட்சியர் பவன்குமார் கூறியுள்ளதாவது: காரமடை ஊராட்சிக்கு உட்பட்ட கடமான் கோம்பை கிராமத்தில் கோட்டாட்சியர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரூ. 2.5 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்க அரசிடம் அனுமதி கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வனத் துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் செல்போன் டவர் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அனைத்துப் பணிகளும் தொடங்கப்படும் என்று ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
Leave a Reply