மேட்டுப்பாளையம்,; காந்தையாறு பாலம் கட்டுமான பணிகள் மெதுவாக நடைபெறுவதை கண்டித்து, விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட காந்தவயல், காந்தையூர், உலியூர், மொக்கை மேடு, ஆளூர் ஆகிய பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதியிலும், பவானிசாகர் அணை நீர் திறக்கப் பகுதியிலும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை விவசாயம் நடைபெறுகின்றன. லிங்காபுரத்துக்கும் – காந்தவயலுக்கும் இடையே காந்தையாறு ஓடுகிறது.
ஆற்றின் குறுக்கே கடந்த, 2023ம் ஆண்டு உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் துவங்கின. இரண்டு ஆண்டுகளில் பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் குறைவான ஆட்களை வைத்து பாலம் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து காந்தவயல், லிங்காபுரம் விவசாயிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டு பருவமழையின் போது, பெய்த மழையால், இரண்டு முறை காந்தையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் தேங்கியது. இதனால், பாலம் கட்டும் பணிகள் நின்றன.
நான்கு மாதங்களாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோர் ஆபத்தான நிலையில் பரிசலில் பயணம் செய்து வந்தனர். விவசாய விளை பொருட்களை, மிகுந்த சிரமத்திற்கு இடையே, கொஞ்சம் கொஞ்சமாக பரிசலில் கொண்டு வந்தனர்.
தற்போது காந்தையாற்றில் தண்ணீர் குறைந்துள்ளது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பாலம் கட்டும் பணிகளை அதிக ஆட்களை வைத்து செய்ய வேண்டும். இதேநிலை நீடித்தால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலானாலும், அதிகாரிகள் பாலம் கட்டி முடிக்க மாட்டார்கள்.
இன்னும் மூன்று மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும். அப்போது ஆற்றில் தண்ணீர் வந்தால், தண்ணீர் குறையும் வரை பணிகள் செய்ய முடியாது. மக்களும் பரிசல் பயணம் செய்யும் நிலை ஏற்படும்.
பாலம் கட்டும் பணிகள் மெதுவாக நடைபெறுவதற்கு காரணமாக உள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்தும், மெத்தனமாக பணிகள் செய்யும், ஒப்பந்ததாரரை கண்டித்தும், சிறுமுகையில், விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
Leave a Reply