கோவை: தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையின் புறநகர் சாலை இன்று வரை இருவழிச்சாலையாகவே இருக்கிறது என்பது எதார்த்தமான உண்மை. அதுவும் எந்த சாலை தெரியுமா? கொச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பைபாஸ் சாலையாகும். கோவை நீலாம்பூர்-மதுக்கரை புறவழிச்சாலை இன்று வரை இருவழிச்சாலையாகவே உள்ளது.இந்த சாலை எப்போதோ நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்திருக்க வேண்டும். ஆனால் பல கட்ட கோரிக்கைக்கு பிறகு தான்போதுதான் அதற்கு விடிவுகாலம் பிறக்க போகிறது. விரைவில் நான்கு வழிச்சாலையாக போவதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
2005ம் ஆண்டு என்று ஒரு நியாபகம்.. சரியாக ராவத்தூர் பாப்பம்பட்டி பிரிவு, இருகூர், ஒண்டிப்புதூர் பகுதி மக்களுக்கு ஒண்டிப்புதூர் ரயில்வே மேம்பாலம் பெரிய இடையூறாக இருந்தது. அந்த மேம்பாலம் கட்டுவதற்கு பல காலம் ஆனது. இல்லாவிட்டால் திருச்சி சாலையில் வரும் வண்டிகள் அத்தனையும் இருகூர் ஊருக்கு சென்று ரயில்வே கேட்டில் நின்று, நெரிசலில் சிக்கி, திணறித்தான் காந்திபுரமோ, உக்கடமோ போக முடியும்.. அப்போது தான் எல் அண்டு டி சாலை இருவழிச்சாலையாக நீலம்பூர் தொடங்கி மதுக்கரை வரை போடப்பட்டிருந்தது.
எல் அண்டு டி-யின் இந்த சாலை வழியாக மக்கள் சின்னியம்பாளையம் சென்று அதன்பிறகு கோவைக்கு செல்லும் அளவிற்கு ஒண்டிப்புதூர் மேம்பாலம் சிக்கலாக இருந்தது. எல் அண்டி சாலை அப்போது சாலை அமைக்கும்போதே நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படாதது எவ்வளவு பெரிய தவறு என்பது அப்போது தெரியவில்லை.. ஆனால் கடந்த 10 வருடங்களில் மக்கள் அந்த சாலையால் சந்தித்த சிக்கல் சொல்ல மாளாது..ஏனெனில் சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலை கோவை அருகே நீலாம்பூர் வரை 6 வழிச்சாலையாக இருக்கிறது. அதுவும் எப்படி என்றால், தமிழ்நாட்டிலேயே எங்குமே அப்படி சாலை கட்டமைப்பு இருக்கிறதா என்று பிரம்மிக்கும் அளவிற்கு இருக்கும்.. ஏனெனில் கோவை முதல் அவினாசி வரை பல தொழிற்சலைகள் உள்ளன என்பதை உணர்ந்து, ஆறுவழிச்சாலைகள் மேம்பால வடிவில் கட்டப்பட்டது. முழுக்க முழுக்க மேம்பால வடிவில் சாலை இருக்கும். எந்த வாகனங்களும் சாலையில் குறுக்கே வராத அளவிற்கு திட்டமிட்டு அமைத்தார்கள்.
அப்படி அமைத்த கையோடு விடவில்லை.. நீலாம்பூர் முதல் உக்கடம் வரை உயர்மட்ட பாலமும் அமைத்து வருகிறார்கள். இந்த பணியும் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் முடிந்துவிட்டது. ஆனால் கோவை மாநகருக்குள் நுழையாமல், நேராக புறநகர் பகுதியான மதுக்கரை செல்லும் வகையில் 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள இருவழிச்சாலை இன்றைய தேதிக்கு ஆறு வழிச்சாலையாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த சாலை இன்று வரை இருவழிச்சாலை என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த சாலையை எல்.அண்டு.டி. நிறுவனம் பராமரித்து வருகிறது.இந்த சாலை குறுகியதாக இருப்பதாலும், ஏராளமான வாகனங்கள் செல்வதாலும் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. ராவத்தூர், வெங்கிட்டாபுரம், ஈச்சனாரி, போடிபாளையம், நாச்சிபாளையம், சிந்தாமணி புதூர் பிரிவுகளில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருவதால் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக இருக்கிறது.. கோவை மக்களின் பல வருட கோரிக்கைக்கு அதிகாரிகள் செவி சாய்த்துள்ளனர்.இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, கோவை நீலாம்பூர்-மதுக்கரை இடையே உள்ள புறவழிச்சாலையை 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.இந்த சாலையின் தனியார் ஒப்பந்த காலம் முடிவடையும் வரை காத்திருக்காமல், புறவழிச்சாலை விரிவாக்கத்துக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கும்படி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குழுவினர் மூலம் எல்.அண்டு.டி. நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த மாத இறுதிக்குள் விரிவாக்க நிலவரம் இறுதி செய்யப்பட்டு விடும் என்றார்கள். இந்த சாலையை அகலப்படுத்தினால் கோவை புறநகர் வழியாக செல்லும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Leave a Reply