கோவையில் பிரபல நகைக்கடையில் ஒரே பொய் தான்.. ரூ.12.5 லட்சம் வைர நகைகளை தூக்கிய பெண்கள்

கோவை: கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் பிரபல தனியார் தங்க நகைக்கடை ஒன்று உள்ளது. இந்த நகைக்கடைக்கு ஒரு சொகுசு காரில் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் வந்துள்ளனர்.அவர்கள் 12.5 லட்சத்துக்கு வைர நகை வாங்கியதுடன், அதற்காக காசோலை கொடுத்துள்ளனர். ஆனால் அந்த காசோலை போலி என்பது தெரியவந்துள்ளது. பிரபல நகைக்கடை ஊழியர்களை எப்படி அந்த நான்கு பேரும் ஏமாற்றினார்கள் என்பது பற்றி பார்ப்போம்.
வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்.. சொகுசு காரில் வருபவன் ஏமாற்ற மாட்டான்.. பெரிய செல்வந்தன் கடன் வாங்கினால் திரும்ப கொடுப்பான், நல்ல உடை அணிந்தவன் மட்டுமே நல்லவன் என்ற பொய்களை இன்றும் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். டிப் டாப்பாக சொகுசு காரில் வந்து கோவையில் உள்ள பிரபல நகைக்கடையை ஒரு கும்பல் ஏமாற்றி உள்ளது. என்ன நடந்தது என்று பார்ப்போம்.


காந்திபுரம் கிராஸ்கட் ரோடு : கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு நகைக்கடை, ஜவுளிக்கடைகள் அதிகஅளவில் அமைந்துள்ள பகுதியாகும். கோவையில் டவுன் ஹாலுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான மக்கள் நகை மற்றும் ஜவுளி வாங்க வந்து செல்லும் இடமாக கிராஸ்கட் ரோடு பகுதி உள்ளது. கிராஸ்கட் ரோட்டில் தமிழ்நாட்டின் பிரபலமான அத்தனை நகைக்கடைகளும், ஜவுளிக்கடைகளும் அமைந்துள்ளது. கிராஸ்கட் ரோட்டில் அப்படி அமைக்கப்பட்டுள்ள பிரபல தனியார் தங்க நகைக்கடை ஒன்றுக்கு சொகுசு காரில் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் வந்தனர். அவர்கள் டிப்-டாப்பாக உடை அணிந்து வந்துள்ளார்கள். சொகுசு காரில் வந்தனர் அவர்கள், கடை ஊழியர்களிடம் நாங்கள் தொழில் அதிபர்கள் என்றும் ஒருவருக்கு அன்பளிப்பாக வைர நெக்லஸ் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். விலை எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லை. நன்றாக அழகாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். உடனே அங்கிருந்த ஊழியர்கள் விதவிதமான தங்க நெக்லஸ்களை எடுத்து காட்டினர். அதில் ஒரு வைர நெக்லஸ் மிகவும் பிடித்து இருப்பதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதன் விலை ரூ.12.5 லட்சம் என்று ஊழியர்கள் கூறினர். அதை வாங்கிக் கொள்ள விரும்புவதாக அவர்கள் கூறினர். இதையடுத்து பணம் செலுத்தும் இடத்துக்கு சென்ற அவர்கள், அவசரத்தில் நாங்கள் வங்கி ஏ.டி.எம். கார்டை எடுத்து வர மறந்து விட்டோம். எங்களிடம் பணம் குறைவாகதான் உள்ளது. எனவே காசோலை தருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.
தொழில் அதிபர்கள் : இரண்டு பெண்களும்,ஆண்களும் டிப்-டாப் உடை அணிந்து இருந்ததை பார்த்த கடை ஊழியர்கள், அவர்கள் தொழில் அதிபர்கள் என்று நம்பி காசோலையை வாங்கிக் கொண்டனர். அதில் உங்களின் செல்போன் எண்ணை அதில் எழுதி தருமாறு ஊழியர்கள் கேட்டு உள்ளனர். உடனே அவர்கள், ரூ.12.50 லட்சத்துக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி காசோலையை கொடுத்து, அதன் பின்னால் 2 செல்போன் எண்களை எழுதி கொடுத்திருக்கிறார்கள்.
ரூ.12.5 லட்சம் வைர நெக்லஸ் :இதையடுத்து பிரபல நகைக்கடை ஊழியர்கள், அவர்களிடம் ரூ.12.5 லட்சம் வைர நெக்லசை கொடுத்தனர். அதை வாங்கிக் கொண்டு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டார்கள். இதையடுத்து கடை ஊழியர்கள், அந்த டிப்-டாப் ஆசாமிகள் கொடுத்த காசோலையை வங்கியில் வசூலுக்கு போட்டனர். அப்போது அந்த காசோலையில் இருக்கும் வங்கி கணக்கு எண் பல மாதங்களுக்கு முன்பே முடக்கம் செய்யப்பட்டதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போலி காசோலை இதையடுத்து கடை ஊழியர்கள், டிப்-டாப் ஆசாமிகள் கொடுத்த 2 செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டனர். அவை சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்து. அப்போது தான் அவர்கள் போலி காசோலையை கொடுத்து வைர நெக்லஸ் வாங்கி விட்டு மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து நகைக்கடை மேற்பார்வையாளர் மனோஜ் அளித்த புகாரின் பேரில் காந்திபுரத்தில் காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலி காசோலையை கொடுத்து ரூ.12.5லட்சத்துக்கு நகை வாங்கி மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து அவர்கள் நான்கு பேரையும் தேடி வருகிறார்கள்.