கோவையில் கோடி கோடியாக போனஸ் தந்த ஓனர்.. திக்குமுக்காடிய ஊழியர்கள்.. ஏன் தெரியுமா? வாவ் கோயம்புத்தூர்

கோவை: கோவை அவினாசி சாலையில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தனது 140 ஊழியர்களுக்கு ரூ 14.5 கோடியை போனஸாக வழங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கோவை அவினாசி சாலையில் நவ இந்தியா பகுதியை தலைமையிடமாக கொண்டு கோவை.கோ என்ற தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்திற்கு சென்னை, இங்கிலாந்தில் கிளைகள் உள்ளன. இங்கு சுமார் 300 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். தங்களது நிறுவனத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு 140 பேருக்கு 14.5 கோடியை போனஸாக அறிவித்தது அந்த நிறுவனம். Together We grow என்ற திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்பு இந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் மூன்று ஆண்டுகள் சேவையை முடித்தவுடன் அவர்களின் மொத்த ஆண்டு சம்பளத்தில் பாதியை போனஸாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் முதல் கட்டமாக 80 ஊழியர்கள் ஜனவரி மாத ஊதியத்துடன் போனஸை பெற்றுள்ளனர். இதுகுறித்து இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் சரவணக்குமார் கூறுகையில், நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் லாபத்திற்கும் பங்களிக்கும் ஊழியர்களுக்கு போனஸ் அளிக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

இது என் நீண்ட நாள் கனவாகவும் இருந்தது. நாங்கள் ஊழியர்களுக்கு பங்குகளை தரலாம் என நினைத்தோம். ஆனால் அவை காகித பணமாக இருக்குமே தவிர ஊழியர்களுக்கு பலனை அளிக்காது. எனவே நாங்கள் பணமாகவே போனஸை வழங்க முடிவு செய்து வழங்கினோம். எங்கள் பணியாளர்கள் அதை தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இது போல் கணிசமான தொகை கிடைக்கும் போது அவற்றை வங்கிக் கடனை அடைப்பதற்கும் வீடு வாங்க முன்பணம் செலுத்துவதற்கும் அல்லது தேவைக்கேற்ப முதலீடு செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து இந்த நிறுவனத்தில் பணியாற்றுவோர் கூறுகையில், இத்தகைய பெரிய தொகை கிடைக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. வெளி மாநிலங்களில்தான் இது போன்ற போனஸ் விவகாரங்களை பார்த்துள்ளோம். ஆனால் அது எங்களுக்கே கிடைத்துவிட்டது என நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றனர். இந்த நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு 16 மில்லியன் டாலர் ஆண்டு வருவாயை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.