திட்டமெல்லாம் நல்லாத்தான் இருக்கு… பள்ளி கழிவறைகளில் தண்ணீர் இருக்கா?

கோவை; மாணவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்க, தமிழக அரசு, பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டத்தை நடைமுறைபடுத்தியுள்ளது. ஆனால், கோவையில் பல பள்ளிகளில் இத்திட்டம் சரிவர செயல்படவில்லை.பள்ளிகளில் அதிக நேரம் செலவிடும் மாணவர்களிடையே, நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், அனைத்துவகை பள்ளிகளிலும் தினமும் காலை 11:00, மதியம் 1:00 மணி மற்றும் பிற்பகல் 3:00 மணிக்கு, ‘வாட்டர் பெல்’ அடிக்கப்படுகிறது.

இந்த நேரங்களில், வகுப்புகளுக்கு இடையூறு ஏற்படாமல், மாணவர்கள் 2 முதல் 3 நிமிடங்கள் தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்படுகிறது.

இதற்காக, மாணவர்கள் வீட்டிலிருந்து தண்ணீரோ, தண்ணீர் இல்லாவிட்டால் வெறும் பாட்டிலோ கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.காலை நேர கூட்டங்களில் (ஸ்கூல் பிரேயர்) தண்ணீர் குடிப்பதின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் விளக்கமாக கூற வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நடைமுறையில் இல்லை


ஆனால், பல்வேறு பள்ளிகளில் இந்த நடைமுறை சரியாக பின்பற்றப்படுவதில்லை. குறிப்பாக, சூலூர், கிணத்துக்கடவு, அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் பெரும்பாலான பள்ளிகளில், ‘வாட்டர் பெல்’ திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. திட்டம் தொடர்பான அறிவிப்பும், மாவட்ட பள்ளிக்கல்வித் துறையிடமிருந்து பெறப்படவில்லை என்கின்றனர் ஆசிரியர்கள்.

‘அரசு பள்ளிகளில் சிலர் பாட்டிலை கொண்டு வர மறுக்கிறார்கள். ஆனால், பள்ளிகளில் உள்ள குடிநீர் வசதியை பயன்படுத்துகின்றனர்’ என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பதை, கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த சிறந்த திட்டத்தை சரியாக அமல்படுத்த வேண்டும்.

தண்ணீர் வசதி வேண்டும்

‘வாட்டர் பெல்’ திட்டம் சரியாக செயல்பட, ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் முழுமையான ஈடுபாடும், மாணவர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம் எனக் கூறும் சமூக ஆர்வலர்கள், ‘பல பள்ளி கழிவறைகளில் தண்ணீர் வசதி போதாது. இதனால் மாணவ, மாணவியர் சிறுநீரை அடக்கி வைத்துக்கொள்ளும் நிலை உள்ளது. கழிவறைகளில் போதுமான தண்ணீர் வசதி ஏற்படுத்தினால், தைரியமாக தண்ணீர் குடிப்பர். சிறுநீர் கழிப்பர். தண்ணீர் குடிக்க அனுமதிக்கும் நேரங்களில், சிறுநீர் கழிக்கவும், உரிய இடைவெளி அளிக்கப்பட வேண்டும்’ என்கின்றனர்.