பள்ளிகளில் துவங்கிய வாசிப்பு இயக்கத்தால்… மாற்றம் ஏற்படும்!: மாணவர்கள் ஆர்வம் காட்டுவதால் நம்பிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. வாசிப்பு திறன் மேம்பட்டு, மாணவர்கள் புத்தகங்களை படிக்க ஆர்வம் காட்டுவதால், நிச்சயம் மாற்றம் ஏற்படும் என, ஆசிரியர்கள், கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் வாசிப்பு திறன் குறைந்து வருகிறது. எழுத்துக்களை படிக்க மாணவர்கள் கஷ்டப்படுவதாக கூறப்பட்டு வந்தது. இதனால், மாணவர்களிடம் வாசிப்பு திறனை மேம்படுத்த அரசு பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் துவங்கப்பட்டது.

இதற்காக அரசு பள்ளிகளுக்கு நுழை, நட, ஓடு, பற என நான்கு வகைகளில் மாணவர்களின் வாசிப்புதிறனுக்கு ஏற்ப புத்தகங்கள் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. வாசிப்பு இயக்கத்தின் வாயிலாக, முதற்கட்ட புத்தகங்கள் – 53, இரண்டாம் கட்டம் – 70, மூன்றாம் கட்ட புத்தகங்கள் – 81 என, மொத்தம், 174 புத்தகங்கள் வந்துள்ளன.

ஆங்கில புத்தகங்கள், 30 வந்துள்ளன.மொத்தம், 250 புத்தகங்களில், 174 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. மீதம் உள்ள, 76 புத்தகங்களும் முழுக்க, முழுக்க மாணவர் படைப்புகளாக வெளி வர உள்ளன. இது மாணவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள், ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

கல்வியாளர் லெனின் பாரதி கூறியதாவது:

வாசிப்பு என்பது, மாணவர்கள் முதலில் எழுத்துக்களை வாசித்து வார்த்தைகளை உள் வாங்குவதில் துவங்குகிறது. குழந்தைகளுக்கு சிந்திக்கும் திறனை புத்தக வாசிப்பு மேம்படுத்துகிறது. எனவே, புத்தக வாசிப்பு இயக்கமாக முன்னெடுக்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது.பாட நுால்களால் ஒட்டுமொத்த உலகையும் காட்டிட முடியாது. அது ஒரு ஜன்னல் மட்டுமே. அடிப்படையான அறிவு, ஆழமான அறிவுத்தேடலுக்கான ஆரம்பப்புள்ளி வாசிப்பாகும்.

குழந்தைகளை வாசிக்க வைக்க தொடர்ச்சியான ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம். அத்தகைய செயல்பாட்டை தருகிறது வாசிப்பு இயக்கம். கேட்போராக இருக்கும் குழந்தைகளை வாசிப்போராக மாற்றும் முயற்சியாகும்.

பல முன்னேறிய நாடுகளில், 70 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட, குழந்தைகளின் சுய வாசிப்பு இயக்கம், இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில், 250 புத்தகங்களுடன் துவங்கியுள்ளது.

தட்டுத்தடுமாறி வாசிக்கும் குழந்தைகளை தன்னம்பிக்கையோடு வாசிக்க வைப்பது தான் நோக்கமாகும். வாசிப்பில் தடுமாற்றத்தை சரிசெய்து முதலில் சுதந்திரமான சூழலை குழந்தைகளுக்கு உண்டாக்க வேண்டும். வாசிப்பை வளர்த்தெடுக்க புத்தகத்தின் மொழி மற்றும் உள்ளடக்கத்தில் எளிமையும், மகிழ்ச்சியும் அவசியமாகும்.

வாசிப்பு இயக்க புத்தகங்கள், எளிய சொற்கள், சின்ன வாக்கியங்கள், வண்ண ஓவியங்கள் கொண்டவையாக உள்ளன. சிறார்களை படைப்பாளிகளாக மாற்றும் முயற்சியாகும்.படிப்பாளிகளை கொண்டாடும் வகுப்பறைகளில் படைப்பாளிகளை கொண்டாட வாசிப்பு இயக்கம் உள்ளது. இந்த வாசிப்பு இயக்கம், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகளில் செயல்படுகிறது. இது மாணவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தி படிக்கும் ஆர்வத்தை துாண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

வாசிப்பு மேம்படும்!

கோடங்கிப்பட்டி அரசுப்பள்ளி தலைமையாசிரியர் தினகரன் கூறுகையில், ”வாசிப்பு பழக்கத்தை சிறு வயதிலேயே மாணவர்களிடம் விதைக்கப்படுகிறது. நுழை, நட, ஓடு, பற என நான்கு வகைகளில் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு புத்தகமும், 16 பக்கங்கள் கொண்டது. எளிதாக வாசிக்கும் வகையில் உள்ளது. மாணவர்கள் ஆர்வமாக புத்தகங்களை படிக்கின்றனர். மாணவர்கள், ஆசிரியர்கள் உதவியுடன் படைப்புகளை தயார் செய்யவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, பள்ளிகளில் தினமும் நாளிதழ்களில் வெளிவரும் அன்றாட செய்திகளை, ‘நோட்டீஸ் போர்டில்’ எழுதி போடுகிறோம். மாணவர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும், வாசிப்பை மேம்படுத்தும்,” என்றார்.