அதிக பஸ் இயக்காததே காரணம்

செ ன்னைக்கு அடுத்து தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில், வளர்ந்த நகராக உள்ளது கோவை. இதனால், வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் இங்கு படையெடுத்து வருகின்றனர்.பஸ் போன்ற பொது போக்குவரத்தையே, இம்மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். கோவை மண்டலத்தில் உள்ள, 17 பஸ் டிப்போக்களில் இருந்து, நுாற்றுக்கணக்கான டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தவிர, ஏராளமான தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. இருந்தபோதும் காலை, மாலை போன்ற ‘பீக்’ நேரங்களில், மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் பயணிப்பதும், கீழே விழுந்து விபத்துக்குள்ளாவதும் நடக்கிறது.
பல அரசு டவுன் பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. தனியார் பஸ்களில் இந்த வசதி இல்லாததால், படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிப்பதே, விபத்தை ஏற்படுத்தி விடுகிறது.

பெற்றோர் தரப்பிலும், கல்வி நிறுவனங்கள் தரப்பிலும், இந்த ஆபத்தான படிக்கட்டு பயணம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அதேசமயம், அதிவேகமாகவும், அலட்சியமுடனும் பஸ்களை இயக்கும் ஒருசில ஓட்டுனர்கள் மீதும் போலீசார், போக்குவரத்து துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிக அரசு பஸ் தேவை

காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி, அலுவலகங்களுக்கு செல்வோரும், திரும்புவோரும் அதிகம் என்பது, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். அதிக பஸ் தேவைப்படும் இந்த மார்க்கங்களில், ‘பீக் அவர்’சில் அரசு அதிக பஸ்களை இயக்க வேண்டும். ஆனால் நெருக்கடி மிகுந்த இந்த நேரங்களில், முக்கிய ரூட்டுகளில் தனியார் பஸ்களையே அதிகம் காண முடிகிறது.
அவர்களும் அதிக வசூலுக்கு ஆசைப்பட்டு, பஸ் நிறைய பயணிகளை அடைத்துச் செல்வது தான், இந்த தொங்கல் பயணங்களும், விபத்துக்களும் ஏற்பட காரணம். வேண்டுமென்றே இந்த ரூட்டுகளில், கூடுதல் தனியார் பஸ்களுக்கு பெர்மிட் அளிக்கப்படுகிறதோ, இதில் லஞ்சம் விளையாடுகிறதோ என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.
தனியார் பஸ்கள் பயணிகளை புட்போர்டு வரை நிரப்பி, அள்ளிச்சென்ற பிறகு, அரசு பஸ்கள் சாவகாசமாக ஒன்றன் பின் ஒன்றாக காற்றாடி வருவது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இந்த குற்றச்சாட்டுகள் தவறு என்பதை நிரூபிக்க, முக்கிய ரூட்டுகளில், காலையும், மாலையும் அரசு கூடுதல் பஸ்களை இயக்க முன்வர வேண்டும்.