அன்னுார்; பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும், அத்திக்கடவு திட்டத்தில் பெரும்பாலான குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை.முறையாக பராமரிப்பு பணி செய்யாத நிறுவனங்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென அத்திக்கடவு திட்ட கண்காணிப்பு பொறியாளரிடம் கூட்டமைப்பு முறையிட்டுள்ளது.

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஆண்டுக்கு, 1.5 டி.எம்.சி., நீர் குளம், குட்டைகளில் நிரப்பப்பட வேண்டும்.
கோவை மாவட்டத்தில் அன்னுார், எஸ்.எஸ்.குளம், சூலூர், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய ஒன்றியங்களில் 286 குளம், குட்டைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான குளம், குட்டைகளுக்கு அத்திக்கடவு நீர் வருவதில்லை.
தற்போது பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பில்லூர் அணை நிரம்பியுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து நிமிடத்திற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. எனவே குளம், குட்டைகளில் நீர் நிரப்ப வேண்டும் என்று கோரி அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் நடராஜன், கணேசன் உள்ளிட்டோர் நேற்று அவிநாசியில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் முறையிட்டனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:
பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் நீரில் 60 சதவீதம் கோவை மாவட்டத்திற்கு வழங்க வேண்டும். ஆனால் தற்போது 20 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. வேப்பம்பள்ளம் புதூர், குப்பே பாளையம் உள்ளிட்ட சில ஊராட்சிகளில் இதுவரை ஒரு முறை கூட தண்ணீர் வரவில்லை. சோதனை ஓட்டமே நடைபெறவில்லை,’ என்றனர்.கண்காணிப்பு பொறியாளர் திருமலை குமார் பதிலளிக்கையில், தற்போது களப்பணி வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பிரச்னைகள் சரி செய்யப்பட்டு அனைத்து குளம் குட்டைகளுக்கும் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில்,’ உடைப்பு ஏற்பட்டால் விரைவில் சரி செய்வதில்லை. சரி செய்வதற்கு தண்ணீர் முழுமையாக நிறுத்தப்படுகிறது. பராமரிப்பு பணி மிக மோசமாக நடைபெறுகிறது.
இதனால் ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணியை ஏற்றுள்ள இரு நிறுவனங்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
தற்போது ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது அதை பயன்படுத்தி குளம் குட்டைகளில் நீர் நிரப்ப வேண்டும்.
சில இடங்களில் விவசாயிகள் சிலர் நீர் அளவீட்டு கருவியான ஓ.எம்.எஸ்., கருவி வழியாக தண்ணீர் பெறுவதற்கு பதில் முன்னதாகவே குழாயில் மாற்றம் செய்து நேரடியாக குளத்தில் தண்ணீர் விடுகின்றனர்.
அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
போராட்டம்
வருகிற ஆக. 15ம் தேதிக்குள் கோவை மாவட்டத்தில் திட் டத்தில் சேர்க்கப்பட்ட 286 குளம், குட்டைகளுக்கும் நீர் விட வேண்டும். இல்லாவிட்டால் அத்திக்கடவு திட்டமைப்பு சார்பில் மிகப் பெரும் போராட்டம் நடத்தப்படும், என கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Leave a Reply