இவர்களும்… மனிதர்கள் தானே! கனவானது கான்கிரீட் வீடு திட்டம்: உயிர் பயத்தில் பழங்குடியின மக்கள்

வால்பாறை; கான்கீரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டம் கனவாகி போனதால், பழங்குடியின மக்கள் உயிர் பயத்தில் வனத்தில் வசிக்கின்றனர்.மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறையில், காடம்பாறை, வெள்ளிமுடி, சங்கரன்குடி, மரப்பாலம், கல்லார் குடி, கவர்க்கல், பாலகணாறு, நெடுங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு செட்டில்மென்ட் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

அடர்ந்த வனப்பகுதியில் பல ஆண்டுகளாக மண் சுவர்களால் ஆன வீட்டை அவர்களாகவே கட்டி, விவசாயம் செய்து வாழ்கின்றனர். வனத்துறை சார்பில் கான்கீரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பழங்குடியின மக்கள் கவலையில் உள்ளனர்.

பழங்குடியின மக்கள் கூறியதாவது:வனப்பகுதியில் முன்னோர்கள் காலத்தில் இருந்து வசித்தாலும், எங்களுக்கு அரசின் சார்பில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை. குறிப்பாக, குடிநீர், ரோடு, மின் விளக்கு, கழிப்பிடம் உள்ளிட்டவை செய்துதர வில்லை.

வால்பாறையில் தற்போது மழை பெய்யும் நிலையில், நாங்கள் வசிக்கும் வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கான்கீரீட் வீடுகளை உடனடியாக கட்டித்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரோடு வசதி இல்லாததால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி துாக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. வனத்துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் செட்டில்மென்ட் பகுதியில் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.