கால்வாய் பராமரிப்புக்கு முதல்வரிடம் முறையிட போறாங்க! ஆயத்தமாகும் திருமூர்த்தி திட்டக்குழுவினர்

பொள்ளாச்சி; ‘பி.ஏ.பி., பாசன பிரதான, கிளை கால்வாய்களை முறையாக பராமரிக்க நிதி ஒதுக்க வேண்டும்,’ என முதல்வரை சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்த திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, பாசனத்துக்கு நீர் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்துக்கும், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

திருமூர்த்தி அணையிலிருந்து வெள்ளக்கோவில் வரை, 124 கி.மீ., கொண்ட பிரதான கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் வாயிலாக, கிளை கால்வாய் மற்றும் பகிர்மான கால்வாய்கள் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.

இந்த கால்வாய் கட்டப்பட்டு, பல ஆண்டுகள் முழு அளவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், கால்வாய்கள் போதிய பராமரிப்பின்றியுள்ளன.

இச்சூழலில், பிரதான, கிளை கால்வாய்களை புதுப்பிக்க உடுமலை வரும் முதல்வரிடம் திட்டக்குழு சார்பில் மனு கொடுத்து வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.

நடவடிக்கை தேவை


திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் கூறியதாவது:

பி.ஏ.பி., திட்டத்தில், 150 கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட சங்கங்களுக்கு நிதி வசதி என்பது இல்லை. கடந்த காலங்களில், பாசன சங்கங்களில் பொறுப்பில் உள்ள கால்வாய்களை துார்வாரி, கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல, குடிமராமத்து திட்டத்தின் வாயிலாக நிதி வசதி செய்யப்பட்டது. ஆனால், கடந்த, நான்கு ஆண்டுகளாக குடிமராமத்து நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.இதனால், கோவை, திருப்பூர் மாவட்ட கலெக்டர்களை தொடர்பு கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வாயிலாக, கால்வாய்களை துார்வாருகிறோம். நடப்பாண்டு இத்திட்டத்தில் கால்வாய்களை துார்வார இயலாது எனக்கூறுகின்றனர்.

எனவே, விவசாயிகளுக்கு கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல இயலாத நிலை உள்ளது. இதனால், பாசன விவசாயிகளிடம் தமிழக அரசின் மீது அதிருப்தி உள்ளது.

டெல்டா மாவட்டங்களுக்கு, ஆண்டுதோறும் துார்வார நிதி ஒதுக்குவது போல, பி.ஏ.பி., திட்ட கால்வாய்களுக்கும் ஆண்டுதோறும் நிதி ஒதுக்க வேண்டும்.

பி.ஏ.பி., பாசன திட்டத்தின் இதயமாக விளங்கும் காண்டூர் கால்வாயில் விடுபட்ட பகுதிகளுக்கும், பரம்பிக்குளம் பிரதான கால்வாய், கிளை கால்வாய்கள், பகிர்மான கால்வாய்கள், கால்வாய்களில் உள்ள ஷட்டர்கள் மிகவும் பழுதடைந்துள்ளன.

பணிகளை உடனடியாக துவக்க நிதி வழங்க வேண்டும். ஆனைமலையாறு – நல்லாறு அணைத்திட்டம் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.

இது குறித்து வரும், 23ம் தேதி உடுமலைக்கு வரும் முதல்வரை நேரடியாக சந்தித்து, மனு கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

விவசாயிகள் மகிழ்ச்சி

நடப்பாண்டு எதிர்பார்த்ததை விட பருவமழை முன்கூட்டியே துவங்கியதால், பி.ஏ.பி., தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், தண்ணீர் திறப்பு குறித்து, அதிகாரிகளிடம் திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு வலியுறுத்தினர்.நான்காம் மண்டல பாசனத்துக்கு வரும், 27ம் தேதி முதல் ஐந்து சுற்று தண்ணீர் வழங்க வேண்டும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.வழக்கமாக ஆக., மாதம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். நடப்பாண்டு முதல் முறையாக முன்கூட்டியே பருவமழை கை கொடுத்ததால், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு ஜூலை மாதத்தில் திறக்கப்படுவது சாத்தியமாகியுள்ளது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்காக நிலங்களை தயார்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். கடைமடைவரை தண்ணீர் கொண்டு செல்ல பிரதான, கிளை கால்வாய்கள் துார்வாரும் பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும். கோவை மாவட்டத்தில் அனுமதி வழங்கியது போன்று, திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கி உடனடியாக பணிகளை துவங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.