ஆட்டம்னா இது ஆட்டம்!

‘தினமலர் பிரீமியர் லீக்’ கிரிக்கெட் போட்டியின், இரண்டாம் நாளான நேற்று, சிறுவர்கள் தங்கள் அதிரடி ஆட்டத்தின் வாயிலாக, காலிறுதி சுற்றுக்குள் அணிகளை அழைத்துச்சென்றனர்.

தினமலர் நாளிதழ் சார்பில், ‘ஸ்போர்ட்ஸ் லேண்ட்’, ‘ஸ்காலர்ஸ் சொல்யூஷன்ஸ்’, ‘ஓ.கே., ஸ்வீட்ஸ்’ பங்களிப்புடன், 11 முதல், 17 வயதுடைய சிறுவர்களுக்கான, ‘தினமலர் பிரீமியர் லீக்’ கிரிக்கெட் போட்டி, நேற்று முன்தினம் துவங்கியது; மே 2ம் தேதி நிறைவடைகிறது.

டென்னிஸ் பந்து கொண்டு, ‘நாக் அவுட்’ முறையில் நடத்தப்படும் இப்போட்டியில், மாவட்டத்தை சேர்ந்த, 32 அணிகள் பங்கேற்றன.இரண்டாம் நாளான நேற்று, அவிநாசி ரோடு சி.ஐ.டி., கல்லுாரி, சரவணம்பட்டி சங்கரா கல்லுாரி மைதானங்களில், போட்டிகள் நடந்தன.

Latest Tamil News

16 அணிகள் மோதல்!

நேற்று நடந்த இரண்டாம் சுற்றில், 16 அணிகள் விளையாடின. சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில், வி.ஜி.கே., சி.சி., அணியும், ரெய்சிங் ஸ்டார்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த வி.ஜி.கே., அணியினர், 10 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 62 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய, ரெய்சிங் ஸ்டார்ஸ் அணியினர், 3.4 ஓவரில், 63 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். 43 ரன்கள் எடுத்ததுடன், 2 விக்கெட்கள் வீழ்த்திய வீரர் பரணிக்கு, ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அடுத்து, ஆல்பா-11 அணியும், நோ-11 அணியும் விளையாடின.

ஆட்ட நாயகன்

பேட்டிங் செய்த ஆல்பா-11 அணியினர், 10 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 83 ரன்கள் எடுத்தனர். நோ-11 அணியினரோ, 8.5 ஓவரில், 84 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். 50 ரன்கள் எடுத்த வீரர் சேஷாத்திரிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

அடேங்கப்பா-11 அணியும், பினிசிங் பால்கன்ஸ் அணியும் மோத, முதலில் பேட்டிங் செய்த அடேங்கப்பா அணியினர், 10 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 58 ரன்கள் எடுத்தனர்.

பினிசிங் பால்கன்ஸ் அணியினர், 5.9 ஓவரில், 59 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். 40 ரன்கள் எடுத்த வீரர் சச்சினிற்கு, ஸ்காலர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் கலீல் ஷா ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.

கேட் டர்ப் அணியும், ஸ்பார்டன்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கேட் டர்ப் அணியினர், 10 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 173 ரன்கள் எடுத்தனர்.

ஸ்பார்டன்ஸ் அணியினர், 10 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 44 ரன்கள் மட்டுமே எடுத்தனர். கேட் டர்ப் வீரர் அகிலாண்டேஸ்வரன், 50 ரன்களுடன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

அதிரடி ஆட்டம்

வெயிலின் தாக்கத்துக்கு மத்தியில், அனல் பறக்க விளையாடிய சிறுவர்கள், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சங்கரா கல்லுாரி மைதானத்தில், 11 ஸ்டார்ஸ் கணபதி அணியும், வூல்ப் பேக் அணியும் மோதின.

பேட்டிங் செய்த, 11 ஸ்டார்ஸ் அணியினர், 10 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 40 ரன்கள் எடுத்தனர். வூல்ப் பேக் அணியினர், 4.1 ஓவரில், ஒரு விக்கெட் இழப்புக்கு, 41 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடினர்.

இதில், 20 ரன்கள் அடித்ததுடன், 2 விக்கெட் வீழ்த்திய வீரர் சபரி நிஷாந்திற்கு, சங்கரா கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் பாலசுப்ரமணியன், ஆட்ட நாயகன் விருது வழங்கினார். அடுத்து, ஹரிக்கேன் அணியும், ஹோப்ஸ்-11 அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஹரிக்கேன் அணியினர், 10 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 55 ரன்கள் எடுத்தனர். ஹோப்ஸ்-11 அணியினரோ, 4.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு, 57 ரன்கள் எடுத்தனர். 23 ரன்களுடன், 2 விக்கெட் வீழ்த்திய வீரர் ராகுலுக்கு, ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

கோவை பிரதர்ஸ் அணியும், ராயல் கிரிக்கெட் அணியும் மோதிய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கோவை பிரதர்ஸ் அணியினர், 10 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்தனர்.

ராயல் கிரிக்கெட் அணியினர், 10 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 80 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 86 ரன்கள் எடுத்த, கோவை பிரதர்ஸ் வீரர் கவீன்திரா ஸ்ரீக்கு, ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

தி லீக் லெஜண்ட்ஸ் அணியும், எஸ்.கே.சி. விக்டரி வைப்பர்ஸ் அணியும் மோதியதில், முதலில் பேட்டிங் செய்த எஸ்.கே.சி., அணியினர், 10 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 72 ரன்கள் எடுத்தனர்.

தி லீக் லெஜண்ட்ஸ் அணியினர், 9.3 ஓவரில், 2 விக்கெட்டுக்கு, 73 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். வீரர் ரக்ஷித், 46 ரன்களுடன் ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.

இன்று காலிறுதி போட்டிகள் நடக்கின்றன.

பரிசுகளும் விருதுகளும்!

போட்டியில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் கோப்பை, இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரம், கோப்பை, மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம், கோப்பை ஆகியன அணிகளுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பவுலர், தொடர் நாயகன் விருது மற்றும் ஒவ்வொரு போட்டிக்கும், ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்படுகிறது.