ஆன்லைனில் நடக்குது இப்படியும் திருட்டு; பொதுமக்களே உஷார்

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே தபால்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி திரும்ப வந்து விட்டதாக தவறான தகவல் தெரிவித்து, குறிப்பிட்ட வாடிக்கையாளரின் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடும் முயற்சி அரங்கேறி உள்ளது.தற்போது பான் கார்டு, வாகன லைசன்ஸ், புதுப்பித்தல், அரசு வங்கிகளின் ஏ.டி.எம்., கார்டு உள்ளிட்டவை தபால் துறை வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இது தொடர்பான தகவல்கள், தபால் துறை சார்பில் வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுகின்றன. தபால் புறப்பட்ட இடம், வந்து சேரும் நேரம், தற்போது தபால் இருக்கும் இடம் ஆகியவை குறித்து குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படுகிறது. இதில் குறிப்பிட்ட நபருக்கு தற்போது தபால் எங்கு உள்ளது என்பது குறித்து விவரம் அறிய ‘லிங்க்’ அனுப்பப்படுகிறது. அதைக் கொண்டு தபாலின் தற்போதைய நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.பெரியநாயக்கன்பாளையம் அருகே சமீபத்தில் தபால் வருவதாக ஆன்லைனில் தகவல் தெரிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட நபரின் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடும் முயற்சி நடந்தது. வங்கியில் பணம் இல்லாததால், ஆன்லைன் திருட்டு கும்பலின் முயற்சி வீணானது.பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காளிபாளையம் சமூக ஆர்வலர் அன்புச்செல்வன் கூறுகையில், எனக்கு தபால் வந்துள்ளதாக மொபைல் போனுக்கு தகவல் வந்தது. அதில் நான்கு முறை வீட்டுக்கு வந்தும், தபாலை ஒப்படைக்க முடியவில்லை என்றும், உடனடியாக குறிப்பிட்ட ‘லிங்கை’ தொடர்பு கொள்ளுமாறும் தகவல் வந்தது. லிங்கை தொட்டவுடன், எனது வங்கியில் இருந்து எனக்கு தகவல் வந்தது. அதில், 21ஆயிரம் ரூபாய் எனது வங்கி கணக்கில் இருந்து எடுக்க முயற்சி நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எனது வங்கியில், 21 ஆயிரம் பணம் இல்லாததால் ஆன்லைன் மோசடி ஆசாமிகளின் முயற்சி நிறைவேறவில்லை. இது தொடர்பாக பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்றார்.