கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நாளை நடக்கவுள்ள நிலையில், ரூ.4 லட்சம் மதிப்பிலான வெள்ளி வேல் திருடப்பட்டுள்ளது. சாமியார் வேடத்தில் வந்த ஒருவர் வெள்ளி வேலினை திருடும் சிசிடிவி காட்சிகள் கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழ்க் கடவுள் முருகனின் 7ஆம் படை வீழு என்று அழைக்கப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலின் குடமுழுக்கு நாளை நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று முதலே அடுத்த 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் குடமுழுக்குக்கான ஏற்பாடுகளும் படுவேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நாளை குடமுழுக்கு நடக்கவுள்ள நிலையில், இன்று மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள தியான மண்டபத்தில் வெள்ளி வேல் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் மருதமலை கோயிலில் குடமுழுக்கு நடக்கவுள்ளதால், கோயிலின் அனைத்து பகுதிகளிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும் மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள தியான மண்டபத்தில் உள்ள வெள்ளி வேல் திருடப்பட்டுள்ளது. மருதமலை அடிவாரத்தில் வேல் கோட்டம் என்ற மண்டபம் உள்ளது. இதில் முருகனை வேல் ரூபத்திலேயே பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். மூலவருக்கு முன்பாக சுமார் இரண்டரை அடி வெள்ளியால் செய்யப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான வேலினை வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த வேல் திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் பிற்பகல் சுமார் 12 மணியளவில் சாமியார் வேடத்தில் வந்த திருடன் ஒருவன் வெள்ளி வேலினை எடுத்து செல்லும் காட்சிகள் உள்ளது. நாளை குடமுழுக்கு நடக்கவுள்ள நிலையில், இன்று முருகனின் வெள்ளி வேல் திருடப்பட்டிருப்பது பக்தர்களிடையே சோகத்தை அளித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஏராளமான போலீசார் பாதுகாப்பையும் மீறி முருகனின் வெள்ளி வேலினை திருடியது எப்படி என்று பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முருகனின் வேலினை திருடிய நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply