நாளை முதல் ‘டிரெக் தமிழ்நாடு’; மானாம்பள்ளி மலையேறலாம்

கோவை: ‘டிரெக் தமிழ்நாடு’ மலையேற்ற சுற்றுலா திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில், நாளை முதல் டிரெக்கிங் செல்லலாம். எனினும் முதல்கட்டமாக மானாம்பள்ளி வழித்தடம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

Latest Tamil News

தமிழக வனத்துறை சார்பில், ‘டிரெக் தமிழ்நாடு’ மலையேற்ற சுற்றுலா திட்டம் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. இதன்படி, தமிழகத்தின் 40 மலைவழித்தடங்களில் டிரெக்கிங் செல்லலாம். வனத்துறையில், ஆன்லைன் வாயிலாக பதிவு செய்து, டிரெக்கிங் செல்ல முடியும். எளிய வழித்தடம், மிதமானது, கடினமான வழித்தடம் என மூன்று வகை வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவையில், மானாம்பள்ளி, டாப்ஸ்லிப் -பண்டாவரை, ஆழியாறு காண்டூர் கால்வாய், சாடிவயல்- சிறுவாணி, செம்புக்கரை -பெருமாள் முடி, வெள்ளியங்கிரி, பரலியார் ஆகிய வழித்தடங்களில் மலையேற்றம் அனுமதிக்கப்படுகிறது. இதில், வெள்ளியங்கிரி தற்போது பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், மலையேற்றம் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் அனுமதிக்கப்படுகின்றனர்.

தற்போது, தமிழகம் முழுக்க 23 வழித்தடங்கள் மீண்டும் மலையேற்றத்துக்கு திறக்கப்பட்டுள்ளன. இதில், கோவையில் முதல்கட்டமாக மானாம்பள்ளி வழித்தடம் நாளை முதல் அனுமதிக்கப்படுகிறது. மற்ற வழித்தடங்கள் படிப்படியாக அனுமதிக்கப்படும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரியில் தற்போது 6 வழித்தடங்களிலும், திருப்பூரில் ஒரு வழித்தடத்திலும் மலையேற்றம் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை என்பதால், மலையேற்றத்துக்கு அதிக எண்ணிக்கையில் பதிவுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் அனுமதிக்கப்படுகின்றனர்; கட்டண சலுகை வழங்கப்படுகிறது. ஆனால், எளிய வழித்தடங்களில் மட்டுமே, குழந்தைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.