பாதுகாப்பற்ற பயணம்! நான்கு வழிச்சாலையில் எச்சரிக்கை அறிவிப்பில்லை; விபத்து அதிகரிப்பதால் வாகன ஓட்டுநர்கள் அலறல்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி – பல்லடம் வழித்தடம் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும் நிலையில், தேவையான இடங்களில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை இல்லாததால் விபத்து அதிகரித்துள்ளது.பொள்ளாச்சி நெடுஞ்சாலை கோட்டம், கிணத்துக்கடவு நெடுஞ்சாலை உட்கோட்டம், சுல்தான்பேட்டை பிரிவுக்கு உட்பட, பல்லடம் – பொள்ளாச்சி வழித்தடத்தில், காமநாயக்கன்பாளையம் முதல் சுல்தான்பேட்டை வரை மற்றும் அரசூர் பிரிவு முதல் வடசித்துார் பிரிவு வரை இருவழிப்பாதையில் இருந்து நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.

அதில், காமநாயக்கன்பாளையம் முதல் சுல்தான்பேட்டை வரை, முதற்கட்ட தார் ரோடு பணி மற்றும் மையத்தடுப்பு அமைத்தல் நிறைவடைந்துள்ளது. அரசூர் பிரிவு முதல், வடசித்துார் பிரிவு வரை வலது புறம் உள்ள பகுதி ஜல்லி கலவை பரப்புதல் பணி நிறைவடைந்து, மையத்தடுப்பு அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

குறிப்பாக, பொள்ளாச்சியில் இருந்து மையத்தடுப்புடன் நீளும் நான்கு வழிச்சாலை, நெகமம் அருகே சின்னேரிபாளையம் பகுதியில் முடிகிறது. இதேபோல, சிறுகளந்தை – காட்டம்பட்டி, சுல்தான்பேட்டை – காமநாயக்கன்பாளையம் வரை, மையத்தடுப்புடன் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இடைபட்ட பகுதியில், சாலையோரம் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், இருவழி சாலையாகவே உள்ளது. ஆனால், வாகன போக்குவரத்து நிறைந்த இந்த வழித்தடத்தில், வாகன ஓட்டுநர்களை எச்சரிக்கும் வகையில், போதிய ‘ரிப்ளக்டர்’ அமைக்கப்படாமல் உள்ளது.

முக்கிய சாலை சந்திப்புகள், வளைவுகள், கிராமங்களை கடந்து செல்லும் பகுதிகளில், வாகன ஓட்டுநர்களை எச்சரிக்கும் விதத்தில், ‘ரிப்ளக்டர்’கள் இல்லை. அதிலும், நெகமத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கிய வழித்தடத்தில் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள், சின்னேரிபாளையம் மையத்தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளாகின்றன. கடந்த ஒரு வாரத்தில், ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
சிறுகளந்தையில் இருந்து, நெகமம் வரை இருவழிச்சாலை அமைந்துள்ளது. சின்னேரிபாளையம் பகுதியில் நான்கு வழிச்சாலை துவங்குகிறது.

அங்கு ‘மையத்தடுப்புடன் கூடிய நான்கு வழிச்சாலை துவங்குகிறது, மெதுவாக செல்லவும், இடதுபுறம் செல்க,’ என, எந்தவொரு அறிவிப்பு பலகையும் கிடையாது.

இரவில், முகப்பு விளக்கு வெளிச்சத்தை பிரதிபலிக்கும் ‘ரிப்ளக்டர்’ இல்லாததால், இருவழிப்பாதையில் வேகமாக செல்லும் வாகனங்கள், மையத்தடுப்பில் மோதி விபத்து ஏற்படுகிறது. முக்கிய சாலை சந்திப்புகளில் ‘ரிப்ளக்டர்’ அமைக்க வேண்டும்.

புதிதாக ரோடு அமைக்கும் பகுதிகளில், அதற்கான அறிவிப்பு மற்றும் ‘ரிப்ளக்டர்’ போதிய அளவில் இருத்தல் வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஒவ்வொரு கட்டமாக பணிகள் நிறைவு பெறும் போது, அதற்கான கட்டமைப்புகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. அதற்கேற்ப, வழிகாட்டி அறிவிப்பு பலகை, எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது.

விபத்தை தவிர்க்கும் பொருட்டு, தேவையான இடங்களில், எச்சரிக்கை அறிவிப்பு பலகை மற்றும் ‘ரிப்ளக்டர்’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.