கோவை; மரப்பாலம் பகுதியில் ரயில்வே பாலம் பணிகள் நடந்து வரும் நிலையில், மாற்றுப்பாதையான மதுக்கரை மார்க்கெட் வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால், இப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.கோவை மரப்பாலம் பகுதியில், ரயில்வே கீழ்பாலத்தில், கடந்த மே 16ம் தேதி முதல் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், கோவை – பாலக்காடு மற்றும் பாலக்காடு – கோவை செல்லும் கனரக, இலகு ரக வாகனங்கள் மரப்பாலம் வழியாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை — பாலக்காடு மார்க்கமாக, வாகனங்கள், மதுக்கரை, குவாரி ஆபீஸ் சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி, குரும்பபாளையம் ரோடு, மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக, செட்டிப்பாளையம் பிரிவு சென்று, பாலக்காடு சாலையை அடைகின்றன.
பாலக்காடு — கோவை மார்க்கமாக, செட்டிபாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி, விறகுக்கடை பாலம் வழியாக ஏ.சி.சி., தொழிற்சாலை ரோடு வழியாக சென்று, கோவை சாலையை அடைகின்றன. பெரும்பாலான நேரங்களில் இப்பகுதிகளில் தற்போதும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இதில், மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக, செட்டிபாளையம் பிரிவு வரை சாலை மிகவும் குறுகியதாக இருக்கும் நிலையிலும், கோவை – –பாலக்காடு மார்க்கமாகவும், பாலக்காடு — கோவை மார்க்கமாகவும் பஸ்கள், இலகு ரக வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுகின்றன. மேலும் குவாரி ஆபீஸ் சந்திபிலிருந்து இடது புறமாக திரும்புகையில் வாக னங்கள் அதிவேகமாக இயக் கப்படுகின்றன. அந்த சமயங் களில் சாலையை மாணவர் கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் கடக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே அதிவேக வாகனங் களின் வேகத்தை குறைக்க குவாரி ஆபீசில் தற்காலிக வேகத்தடை அமைக்க வேண்டும். இப்பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்கிருந்து பிரதான சாலைக்கு வாகனங்கள் வரும் போது, அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கேரள அரசு பஸ்கள் மற்றும் பல தனியார் டவுன் பஸ்களின் அசுரத்தனமான வேகம், கட்டுக்கடங்காமல் உள்ளதால், மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.பாதசாரிகள் நடந்து செல்லும் சாலையோரத்திலும், சில சமயங்களில் வாகனங்கள் இயக்கப்படுவதால், அவர்கள் அச்சத்தில் உறைகின்றனர்.
எனவே, மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக, செட்டிபாளையம் பிரிவு வரை, பல இடங்களில் வேகத்தடை அமைத்து, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். தவறினால் அதிவேக வாகனங்களை சிறைபிடித்து, போராட்டம் நடத்த இப்பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக செட்டிபாளையம் பிரிவு வரை, காலையும், மாலையும் ஏராளமான பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அவர்கள், இந்த சாலையின் பல இடங்களில் வாகனங்களை நிறுத்தி, குழந்தைகளை ஏற்றி, இறக்கி செல்கின்றனர். அப்போது, குழந்தைகளுடன் சாலையை கடக்க வேண்டும் என்றால், பெற்றோர் மத்தியில் அச்சம் நீடிக்கிறது. இருபுறமும் அதிவேகமாக வரும் வாகனங்களால், சாலையை கடக்க நீண்ட நேரம் ஆகிறது. எனவே, பள்ளி, மாணவ, மாணவியரின் நலன் கருதி, வாகனங்களின் வேகத்துக்கு கடிவாளம் போட வேண்டும். தவறினால், மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Leave a Reply