வேலுமணி இல்ல திருமண விழா: நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு

கோவை; முன்னாள் அமைச்சர் வேலுமணியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது அனுமதியின்றி பிளக்ஸ், அலங்கார வளைவுகள் வைத்ததாக, நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முன்னாள் அமைச்சர் வேலுமணியின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கொடிசியா அரங்கில் கடந்த, 10ம் தேதி நடந்தது.

Latest Tamil News

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, திரைப்பட பிரபலங்கள், அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என, பல ஆயிரம் பேர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியை வரவேற்கும் விதமாக, அவிநாசி சாலையில், இருந்து கொடிசியா வளாகம் செல்லும் சாலை மற்றும் அதனை சுற்றி, இரண்டு கி.மீ.,க்கு அலங்கார வளைவுகள், கட்சி கொடிக்கம்பங்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், அலங்கார வளைவுகள், கட்சி கொடிக்கம்பங்கள், பேனர்களை போலீசார் அனுமதியின்றி வைத்ததாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.உயிருக்கு ஆபத்து விளைவித்தல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ், அ.தி.மு.க., வார்டு செயலாளர் லட்சுமணன் மீது, பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.