வார்டு ‘விசிட்’ வாங்க! பிரச்னைகளை கொட்டித்தீர்த்த கவுன்சிலர்கள்; ‘மக்களுக்காகவே நாம்’ என்று வாக்குவாதம்

கோவை: மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் வார்டு பிரச்னைகளை முன்வைத்த கவுன்சிலர்கள் ‘மக்களுக்காகவே நாம் வேலை செய்கிறோம்; அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுக்கு வரவேண்டும்’ என, ஆவேசமாக பேசினர்.மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, 9 கவுன்சிலர்கள் வரவில்லை.

கூட்டம் காலை, 11:00 மணிக்கு துவங்கிய நிலையில், உக்கடம், புல்லுக்காடு பகுதியில் உள்ள நாய்கள் கருத்தடை சிகிச்சை மையத்தை இடமாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க.,வினர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, கூட்டத்தில், 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துவக்கத்தில் பேசிய ஆளுங்கட்சி கவுன்சில் குழு தலைவர் கார்த்திகேயன்,”அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு அபராதமாக சதுரடிக்கு ரூ.88 விதிக்கப்படுவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தேர்தலுக்கு பிறகு இதை பார்த்துக்கொள்ளலாம்,” என்றார்.

குறுக்கிட்ட கமிஷனர், ”அனுமதியில்லாமல் கட் டடம் கட்டக்கூடாது என் பதற்காகவே அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், இது அரசாணை என்பதால் அதை மீறுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது,” என்றார்.

மா.கம்யூ., கவுன்சில் குழு தலைவர் ராமமூர்த்தி,”ரோடு போடும் விஷயத்தில் கவுன்சிலர்களை அதிகாரிகள் ஆலோசிப்பதில்லை. ஏன் எங்களை புறக்கணிக்கின்றனர்,” என்றார்.

கவுன்சிலர் ராஜலட்சுமி(77): சொக்கம்புதுாரில் ‘யு.ஜி.டி., பம்பிங் ஸ்டேஷன்’ அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.கமிஷனரோ,”கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மிகவும் அவசியம். கழிவுநீர் குளங்களுக்குதான் செல்கிறது. குளங்களை காக்க இந்த வசதியை ஏற்படுத்த வேண்டியுள்ளது,” என்றார்.சுமித்ரா(58): கோத்தாரி நகரில் மழைநீர் வடிகால் தேவை. மழை காலத்தில் மக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர். அருகே மூன்று வார்டுகளின் கழிவுநீர் சிறு பள்ளத்தில் கலக்கிறது. ஒருமுறை வந்து ஆய்வு செய்யுங்கள்.

சரண்யா(30): தனியார் டிபார்ட்மென்ட் ஸ்டோர் அருகே ரோடு ஒன்றுக்கு பூஜை போட்டு இரு மாதங்களாகிறது. பணிகள் இன்னும் துவங்கவில்லை.அதிகாரிகள் ‘விசிட்’ செய்வதாக சொன்னார்கள்; வரவில்லை.

கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி: சிங்காநல்லுார் குளத்தை துார்வார வேண்டும். உள்ளே செல்ல முடியாத வகையில் நுழைவாயிலில் மண் கொட்டப்பட்டுள்ளது.

மத்திய மண்டல தலைவர் மீனா: ‘சூப்பர் சக்கர்’ வாகனங்கள் தேவைப்படுகிறது. யு.ஜி.டி., இணைப்பு கொடுத்து பல ஆண்டுகளாகிய நிலையில் அடைப்பு ஏற்படுகிறது. தாழ்வான வீடுகளுக்குள் ‘ரிவர்ஸ்’ எடுக்கிறது. இதற்கு தீர்வு காண வேண்டும்.

குணசேகரன்(96): குறிச்சி பிரிவு முதல் காந்தி நகர், சிட்கோ வரை ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது. குறிச்சி குளக்கரை எதிரே ரோட்டை ஒட்டி இரும்பு கடைகள் உள்ளன. விபத்துகள் அதிகம் நடக்கின்றன. ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்ற வேண்டும்.

நாய் தொல்லை உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்த கவுன்சிலர்கள்’மக்களுக்காகவே நாம் வேலை செய்கிறோம்’ என, ஆவேசமாகபேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.