இனி அனைத்து வகை பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கட்டாயம்

கோவை; மாணவர்கள் தண்ணீர் பருகுவதை ஊக்குவிக்கும் வகையில், அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்பட்ட ‘வாட்டர் பெல்’ திட்டம், தற்போது அனைத்து வகை பள்ளிகளிலும் நடைமுறைக்கு வருகிறது.வகுப்பு நேரத்தில் மாணவர்கள் சரிவர தண்ணீர் பருகாமல் இருப்பதால், பல்வேறு உடல் நலன் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் தற்போது செயல்படுகிறது.

இதன்படி, காலை 11:00 மணி, மதியம் 1:00 மணி மற்றும் பிற்பகல் 3:00 மணிக்கு ‘பெல்’ அடிக்க வேண்டும்; அப்போது மாணவ மாணவியர் தண்ணீர் குடிக்க வேண்டும் என, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், அமல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டத்தை, மாணவர்களின் நலன் கருதி தனியார் பள்ளி களிலும் விரிவுபடுத்த வேண்டும் என, பெற்றோர் தரப்பில் இருந்து, கோரிக்கைகள் எழுந்ததைத் தொடர்ந்து, தற்போது அனைத்து தனியார் பள்ளிகளும் இந்த திட்டத்தை அமல்படுத்துவது கட்டாயம் என, தனியார் பள்ளிகள் பிரிவின் இயக்குனர் அரசாணை வெளியிட்டுள்ளார்.

தனியார் மெட்ரிக் பள்ளிகள் மட்டுமல்லாது, சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி., உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எனவே, அரசு பள்ளிகள் மட்டுமல்லாது, இனி அனைத்து வகை பள்ளிகளிலும், ‘வாட்டர் பெல்’ திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

– புனித அந்தோணியம்மாள்,

தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர்.

Share