வால்பாறை; சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வால்பாறையில் தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதோடு, பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

கனமழையால், கடுங்குளிர் நிலவுகிறது. காற்றுடன் கூடிய கனமழை தொடர்வதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா ஸ்தலங்களுக்கு சுற்றுலாபயணியர் செல்ல, இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர் மழையால் பி.ஏ.பி., பாசன திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான, சோலையாறு அணை நான்காவது முறையாக நிரம்பியது.
இதனையடுத்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு, வினாடிக்கு 941 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மேலும் அணையின் பாதுகாப்பு கருதி, மதகுகள் வழியாக கேரளாவுக்கு வினாடிக்கு, 4,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
விடிய விடிய பெய்துவரும் கனமழையால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 161.43 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 7,989 கன அடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 6,032 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், வால்பாறை வாழைத்தோட்டம், ஸ்டேன்மோர் ஆற்றுப்பாலம், குரங்குமுடி பாரதிதாசன்நகர், சேடல்டேம் உள்ளிட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழை வெள்ளம் எப்போது வேண்டுமானாலும் வீடுகளை சூழ்ந்து கொள்ளலாம் என்பதால், கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்’ இவ்வாறு, தெரிவித்தனர்.
மேல்நீராறில், 17௦ மி.மீ., நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு(மி.மீ.,): சோலையாறு – 67, பரம்பிக்குளம் – 35, ஆழியாறு – 16, வால்பாறை – 40, மேல்நீராறு – 170, கீழ் நீராறு – 67, காடம்பாறை – 28, மேல்ஆழியாறு -15, சர்க்கார்பதி – 20, துாணக் ௦கடவு – 30, பெருவாரிப்பள்ளம் – 33, நவமலை -10, பொள்ளாச்சி – 18.
Leave a Reply