கோவை; கோவையில் இருந்து தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற, தேர்வாகியுள்ள ஆசிரியர்கள் சிலரிடம், கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான வழிமுறைகளை கேட்டோம். இதோ அவர்களின் ஆலோசனைகள்:
‘புரியும் வகையில் கற்பிக்கணும்’ பாடங்களை எளிதில் புரியும் வகையில் கற்பிக்க வேண்டும். மாணவர்களின் வாழ்வில் ஆரம்பக்கல்வி ரொம்ப முக்கியம். துவக்க நிலை கல்வி வலுவாக இருந்தால், மேல்நிலை வகுப்புகளில் சிறந்து விளங்குவார்கள். – – அமுதா, தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, முடுக்கன்துறை

‘வகுப்பறை சூழல் முக்கியம்’
கல்வி கற்றலில் மாணவர்களின் மனோநிலை முக்கியம். மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல், உளவியல் சார்ந்து கற்பதற்கு ஏற்ற சூழலை, வகுப்பறையில் உருவாக்கினால், கல்வித் தரம் மேம்படும்.
-மதியழகன், தலைமையாசிரியர்(பொ) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,பெட்டத்தாபுரம்
‘கற்பித்தலில் புதுமை வேண்டும்’
நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, ஆசிரியர்கள் தங்களை புதுப்பிக்க வேண்டும். மாணவர்களின் மனோநிலையை புரிந்து கற்பித்தலில் புதுமையை கொண்டு வர வேண்டும்.
– விவேகானந்தன், தமிழ் பட்டதாரி ஆசிரியர், தம்பு மேல்நிலைப்பள்ளி, பிரஸ் காலனி
‘பணிப்பளு குறைக்கணும்’
கற்றலை மேம்படுத்த பல திட்டங்கள் உள்ளன. ஆனால் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பாடம் சாராத வேலைகள் கற்பித்தலில் தடையாக மாறுகின்றன. குறிப்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப் பளுவை குறைக்க வேண்டும்.
– சக்திவேல், இடைநிலை ஆசிரியர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மசக்காளிபாளையம்
‘கதை போல் கற்பிக்கணும்’
மாணவர்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில், பாடங்களை கதை போல் எடுத்துரைக்க வேண்டும். மதிப்பெண்களை மட்டுமே பார்க்காமல், படிப்பில் ஆர்வத்தை தூண்டும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு.
-நளினி, தலைமையாசிரியர் ஸ்ரீ அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
‘வலுவான அடிப்படை கல்வி’
மாணவர்களின் மனோநிலைக்கு ஏற்ப கற்பிக்க வேண்டும். அடிப்படை கல்வி துவக்கப்பள்ளியிலேயே வலுவாக இருக்க வேண்டும். குழந்தைகள் எதிர்பார்ப்பது போல் கற்பித்தால், அடிப்படை கற்றல் அதிகரிக்கும்.- கோமதி, தலைமையாசிரியர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நெகமம்.‘ஊக்குவிக்க வேண்டும்’
பாடத்தை மாணவர்களிடம் திணிக்காமல், எளிமையாகவும், பொறுமையாகவும் எடுத்துரைக்க வேண்டும். இதுவே நல்ல கற்றல் சூழலை உருவாக்கும். வகுப்பறையில் கற்பிக்கும் போது, மாணவர்களுக்கு ஊக்கமளிப்பது போல் நடந்து கொள்ள வேண்டும்.
-சகிலா, தலைமையாசிரியர் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி
‘கற்பித்தலில் மாற்றம் தேவை’
ஒவ்வொரு மாணவரின் கற்றல் திறன் மாறுபடும். அதற்கேற்ப ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் முறையை மாற்றி அமைத்தால், கல்வித் தரத்தை எளிதில் மேம்படுத்த முடியும். ஆசிரியர் மீது நம்பிக்கை ஏற்படும். கற்பித்தலில் துணைக்கருவிகளை காட்சிப்படுத்த வேண்டும்.
– திருமுருகன், கணிதப் பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மூலத்துறை
‘கற்பித்தலில் நவீனம்’
மாணவர்களுக்கு எளிமையான முறையில் கற்பித்தால், அவர்கள் புரிந்து கொள்வார்கள். அதுவே கல்வித் தரத்தை உயர்த்தும் வழியாகும். யூ டியூப் உள்ளிட்ட நவீன கற்றல் முறைகளை பயன்படுத்தி கற்பிக்க வேண்டும்.
-ஆனந்த்குமார், தொழிற்கல்வி ஆசிரியர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேட் டுப்பாளையம்.
‘திறன் அறிந்து கற்பிக்கணும்’
மாணவர்களின் உள்ளார்ந்த திறனை வெ ளிக்கொணர, ஆசிரியர்கள் அவர்களுடன் இணைந்து பழக வேண்டும். அவர்களின் மனோநிலையைப் புரிந்து கற்பித்தால், கல்வித் தரம் மேம்படும். மாணவர்களின் திறன் அறிந்து, புத்திசாலித்தனத்தை வெளிக்கொணர வேண்டும்.
– சுமதி, கணிதப் பட்டதாரி ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி, காந்திமாநகர்
‘தனி கவனம் செலுத்தணும்’
ஏற்கனவே நன்கு கற்கும் மாணவர்களிடம் கவனம் செலுத்துவதை விட, மெல்லக் கற்கும் மாணவர்களிடம் தனி கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் அடிப்படை கற்றலை வலுப்படுத்தினால், கல்வித் தரம் நிச்சயம் உயரும்.
– அற்புதமேரி, தலைமையாசிரியர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, ராமசாமிநகர்
Leave a Reply