‘100, 200 நோட்டுகள் எங்கே? ஏ.டி.எம்.மில் தேடும் மக்கள்

கோவை; ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலுக்கு பின்பும், கோவையில் பெரும்பாலான வங்கி ஏ.டி.எம்.,களில் ரூ. 500 தான் வருகிறது என்று, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.வங்கிகள் அருகில் இருக்கும் ஏ.டி.எம்.,களில் வங்கி நிர்வாகம் சார்பிலும், மற்ற பகுதிகளில் இருக்கும் ஏ.டி.எம்.,களில் ஏஜென்சிகள் வாயிலாகவும் பணம் நிரப்பப்படுகிறது.

பொதுமக்கள் அடிக்கடி பயன்படுத்தும், 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளை, அதிகளவு ஏ.டி.எம்.,களில் தொடர்ந்து வினியோகிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.வரும் செப்., 30க்குள், அனைத்து ஏ.டிஎம்.,களில் 75 சதவீதமும், 2026 மார்ச் 31ம் தேதிக்குள், 90 சதவீதமும், 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் வைத்து வினியோகிக்கும் வகையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது வரை பெரும்பாலான வங்கி ஏ.டி.எம்.,களில் 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் போதியளவு இருப்பதில்லை. பல ஏ.டி.எம்.,களில், 500 ரூபாய் நோட்டுகள் தான் வருகின்றன. இது, வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் சிலர் கூறுகையில், ஏ.டி.எம்.,களில், ரூ.100 மற்றும் ரூ.200 ரூபாய் நோட்டுகள் முறையாக நிரப்பப்படுகிறதா என, வங்கிகள் கண்காணிக்க வேண்டும்’ என்றனர்.