கோவை; கோவை அரசு கலை, அறிவியல் கல்லுாரி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள கல்லுாரிகளில், இரண்டாம் ஷிப்டில் புதிதாக துவங்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு, ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.தமிழகத்தில், 180 அரசுக் கலை, அறிவியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவடைந்து, வகுப்புகள் துவங்கியுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, 100 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 252 புதிய பாடப்பிரிவுகள் நடப்பாண்டில் துவங்கப்பட்டுள்ளன.

அப்பாடப்பிரிவுகளில் பணிபுரிய, 252 கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் நியமிக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதவிர, மாநிலத்தில் உள்ள, 57 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 203 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில், 10 ஆயிரத்து, 396 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 43 கல்லூரிகளில், 49 புதிய பாடப்பிரிவுகளில், 2,950 மாணவர் இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கோவை அரசு கலைக் கல்லுாரியில் இரண்டாம் ஷிப்டுக்கு மட்டும், பி.காம்.,(சி.ஏ.,) பி.காம்.,(ஐ.பி.,), அரசியல், பொது நிர்வாகம், புள்ளியியல், மண்ணியல், தகவல் தொழில்நுட்பம், பி.பி.ஏ., உள்ளிட்ட, எட்டு புதிய படிப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இப்படிப்புகளை கற்பிக்க, புதிதாக ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. மாறாக ஏற்கனவே உள்ள ஆசிரியர்களை, கூடுதலாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளது. தமிழக அரசு, காலியாகும் பணியிடங்களுக்கு கவுரவ விரிவுரையாளர்களை மட்டுமே நியமிக்கிறது. பணி அனுபவம் வாய்ந்த பேராசிரியர் வகுப்பு எடுக்கும் போது, மாணவர்களுக்கு கல்வியுடன், கூடுதல் திறன்களை வளர்க்க வழி ஏற்படும்.மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நிரந்தர பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு, 4,000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உள்ளது. இப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும். தற்போது மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கி விட்டன. இப்போது துவங்கினாலும் பணியிடங்கள் நிரப்பும் பணிகள் நிறைவடைய, இரண்டு மாதங்கள் பிடிக்கும். இப்பணிகளை கல்லுாரி துவங்கும் முன்னரே முடித்திருக்க வேண்டும். மாணவர்களின் நலன் கருதி, இனியாவது உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
– சுரேஷ், பொதுச் செயலாளர்
தமிழக அரசு கல்லுாரி ஆசிரியர்கள் சங்கம்
பாடம் கற்க வேண்டும்’
கோவை அரசு கலைக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால அறிமுகப்பயிற்சி திட்டம் நேற்று துவங்கியது. நிகழ்ச்சியில், கோவை கலெக்டர் பேசுகையில், ”மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் அதிகம் பங்கேற்க வேண்டும். குறிப்பாக, சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுத வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்வில் பிரச்னைகள், தோல்விகள் ஏற்படும். அப்போது நேர்மறையாக சிந்தித்து பார்க்க வேண்டும். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்,” என்றார்.கல்லுாரி முதல்வர் எழிலி வரவேற்றார். கல்லுாரியின் அரசியல் அறிவியல் துறை தலைவர் கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Leave a Reply