
கோவை; சென்னை கிண்டியில் உள்ளது போன்று, தேசிய முதியோர் நல மருத்துவ மனை கோவையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுகாதாரத்துறை போக்குவரத்துத்துறை ஓய்வூதியர் நலச்சங்கம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.சென்னை கிண்டியில் உள்ள, கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், மத்திய அரசின் நிதியில், ‘தேசிய முதியோர் நல மையம்’ (மருத்துவமனை) 2022ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது.புறநோயாளிகள் பிரிவு, அறிவுத்திறன் குறைபாடு சிகிச்சை, எலும்பு தன்மையை உறுதிப்படுத்த சிகிச்சை, எலும்பு தேய்மானம் சிகிச்சை, சிறுநீர் கட்டுப்படுத்த முடியாத முதியவர்களுக்கு சிகிச்சை, நாள்பட்ட வலி மற்றும் பிரச்னைகளுக்கான சிகிச்சை, இதய மருத்துவம், சிறுநீரக மருத்துவம், மூளை நரம்பியல், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், புனர்வாழ்வு மருத்துவம், சித்தா, யோகா, யுனானி, ஓமியோபதி மருத்துவ சிகிச்சைகள், இந்த மருத்துவமனையில் உள்ளன.பிற மருத்துவமனைகளில், அலைக்கழிப்புக்கு ஆளாகாமல், குறைந்த கட்டணத்தில் எளிதாக சிகிச்சை பெற, இம்மருத்துவமனை வசதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சுகாதாரத்துறை போக்குவரத்துத்துறை ஓய்வூதியர் நலச்சங்கம் மாநில பொருளாளர் நாகராஜன் கூறுகையில், ”சென்னையில் மத்திய, மாநில நிதி பங்களிப்புடன் தேசிய முதியோர் நல மருத்துவமனை செயல்படுகிறது. முதியோருக்கு ஏற்படும் பிரச்னைகளைபுரிந்து, அதற்கேற்ப பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற ஒரு மருத்துவமனை, கோவை உட்பட பிற அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும். அரசு ஓய்வூதியதாரர்கள் மட்டுமின்றி அனைத்து முதியோரும் பயன்பெறுவார்கள்,” என்றார்.
Leave a Reply