கோவை,; மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை, மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. நேற்றுமேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நடந்த கூட்டத்தில், பொது மக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.அங்கு மனு அளிக்க வந்த, சின்னவேடம்பட்டியை சேர்ந்த காளிதாஸ் என்பவர், ”சின்னவேடம்பட்டியில் கடந்தாண்டு ஏப்., மாதம் எடைமேடை அமைத்தேன்.
மூன்று மாதங்களுக்கு பிறகு அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், முறையாக அனுமதி பெறவில்லை எனக்கூறி எடை மேடை கடைக்கு ‘சீல்’ வைத்தனர்.
அனுமதிக்காக ஓராண்டாக அலைகிறேன். மாநகராட்சியில் இருந்து அனுமதி தரவில்லை. இங்கு பணம் இருந்தால்தான், எல்லாமே நடக்குமா? அதிகாரிகள் பணத்தை வாங்கிக்கொண்டு, நான் புகார் அளித்தவரின், எடை மேடையை மீண்டும் திறக்க அனுமதித்துள்ளனர். தமிழகத்தில் இப்படியுமா ஒரு ஆட்சி நடக்க வேண்டும்,” என, கமிஷனர், மேயரிடம் கொட்டித்தீர்த்தார்.
நகரமைப்பு அலுவலர் குமார், உதவி நகரமைப்பு அலுவலர் சத்யாஆகியோரிடம் இதுகுறித்து கமிஷனர் விளக்கம் கேட்டபோது, ‘அனுமதி பெறாமல் காளிதாஸ்எடை மேடை செயல்படுவதாக, அதேபகுதியை சேர்ந்த ஒருவர், ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். அதனடிப்படையில் வந்த கோர்ட் உத்தரவின்படி, எடை மேடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
அதேபோல், எதிர் மனுதாரரும் அனுமதியின்றி எடை மேடை வைத்துள்ளதாக, காளிதாஸ் அளித்த புகாரின் பேரில், அவரது எடை மேடைக்கும் ‘சீல்’ வைத்தோம்.அவர் அரசிடம் மேல்முறையீடு செய்து, மீண்டும் திறந்துள்ளார்’ என தெரிவித்தனர்.
வாழ்வாதாரத்திற்கு வழி
உக்கடம், புல்லுக்காடு பகுதியை சேர்ந்த பாப்பம்மாள் அளித்த மனுவில், ‘நான் உட்பட ஐந்து பேர் கடந்த, 11 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சி வடக்கு மண்டலத்தில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வந்தோம். தினக்கூலியாக ரூ.150 பெற்றுவந்த நிலையில் ஒப்பந்ததாரரிடம் கூடுதலாக சம்பளம் கேட்டுவந்தோம்; கிடைக்கவில்லை.
இந்நிலையில், புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக,எங்கள் ஐந்து பேரையும் வேலையை விட்டு நிறுத்திவிட்டனர். இரு மாத ஊதியமும் நிலுவை வைத்துள்ளனர். மீண்டும் பணி வழங்கி, எங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
Leave a Reply