மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சிறப்பு பயிற்றுநர்களின் கோரிக்கை நிறைவேறுமா? முதல்வரே… கவனியுங்க!

பொள்ளாச்சி: மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சிறப்பு பயிற்றுநர்களின் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்ற வேண்டும், என, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் வலியுறுத்தினர்.பள்ளி கல்வித்துறையில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் உள்ளடங்கிய கல்வி வழியாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 1.32 லட்சம் மாற்றுத்திறன் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம், 2016ன் படி, 21 வகை மாற்றுத்திறன் மாணவர்களுக்கும் பொருத்தமான கல்வி பயிற்சி வழங்குதல், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோருக்கு சிறப்பு கல்வி பயிற்சிகள், ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஆதார மையத்தில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தினர், முதல்வருக்கு அஞ்சல் வாயிலாக மனு அனுப்பி வலியுறுத்தினர்.

இது குறித்து, சங்கத்தினர் கூறியதாவது:

தமிழகத்தில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி அளிக்க சிறப்பு கல்வியியல் பட்டம், பட்டையம் படித்த, 1,600 சிறப்பு பயிற்றுநர்கள் வழியாக கல்வி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் பணியாற்றும் அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களுக்கும், ஐந்து சதவீத ஊதியம் உயர்த்தி வழங்க செயல்முறை வெளியிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கியபோதும், உள்ளடங்கிய கல்வி பணியாளர்கள் மட்டும் விடுபட்டுள்ளனர். கடந்த, இரண்டு ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் பணியாற்றுகிறோம். சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள், சிறப்பு பயிற்சி மையம் பராமரிப்பாளர், உதவியாளர்களுக்கும் ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர், பள்ளி கல்வி ஆணையர் ஆகியோர், சிறப்பு பயிற்றுநர்களுக்கு பணி ஆணை வழங்கிட ஆணையிட்டும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மறுத்து வருகின்றது. சிறப்பு பயிற்றுநர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தொழிலாளர் வைப்பு நிதி, இ.பி.எப்., பிடித்தம் செய்திட, சென்னை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீதம் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்க தாமதிக்கப்படுகிறது. பணியில் இணைந்த நாள் முதல் தொழிலாளர் வைப்பு நிதி வழங்க வேண்டும்.

உள்ளடங்கிய கல்வியில் மாற்றுத்திறன் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊர்திப்படி எட்டு மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. இதை அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்க வேண்டும்.

உச்சநீதிமன்ற நீதிபதி ரஜ்னிஷ்குமார் பாண்டே தீர்ப்பின் அடிப்படையில், நாடுமுழுவதும் சிறப்பு பயிற்றுநர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுகிறது. அதுபோன்று தமிழகத்திலும் சிறப்பு பயிற்றுநர்களை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் பணி செய்வோரையும் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

இவை உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். இது குறித்து முதல்வரிடம் கோரிக்கை மனுவை, அஞ்சலகங்கள் வாயிலாக அனுப்பியுள்ளோம். முதல்வர், உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு, கூறினர்.