தபால் துறை அடையாளம் ‛’முகவரி’ இழக்குமோ

கோவை; கோவையில், பல இடங்களில் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் தபால் பெட்டிகளை பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.நாடு முழுவதும் 1.64 லட்சத்துக்கு மேற்பட்ட தபால் நிலையங்கள் உள்ளன. இதில், 15 ஆயிரம் தபால் நிலையங்கள், நகர் புறத்திலும், 1. 49 லட்சம் தபால் நிலையங்கள் கிராமப்பகுதிகளிலும் இயங்கி வருகின்றன.

ஒரு தபால் நிலையத்துக்கு தபால்களை சேகரிக்க, 3 முதல் அதிகபட்சம் 10 தபால் பெட்டிகள் வரை வைக்கப்படுகின்றன.

கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில், தபால் பெட்டிகள் திறக்கும் நேரம் மாறுபடுகிறது. இன்றைய நவீன யுகத்திலும் கடிதங்கள் போக்குவரத்து இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. விரைவு தபால் அனுப்பும் அதே வேளையில், கடிதங்களும் அனுப்பப்படுகின்றன.ஆனால், பல இடங்களில் உள்ள தபால் பெட்டிகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவைப்புதுார், பாரத ஸ்டேட் பாங்க் சாலை உட்பட பல இடங்களில், துருப்பிடித்தும், பூட்டுகள் உடைக்கப்பட்டும் காணப்படுகிறது.

இதனால், கடிதங்களை இதில் சேர்க்க வரும் பொதுமக்கள், உரிய முறையில் கடிதங்கள் போய் சேருமா என கேள்வி எழுகிறது.

இதற்கு ஏற்றார் போல், தபால் பெட்டிகள் பயன்பாடு இல்லாமல் போகப் போகிறது என, தகவல் பரவியது. ஆனால், தபால் பெட்டிகளின் பயன்பாடு எப்போதும் இருக்கும் என, தபால் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தபால் பெட்டிகளின் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால், தபால் துறையின் அடையாளம் மறைந்து போகாமல் இருக்கும்.