பெ.நா.பாளையம்; ஒழுக்கக்கேடான செயல்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சமீப காலங்களாக ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. கல்வியுடன் ஒழுக்கத்தை கற்றுத் தருவதில் பள்ளிகள் தவறி விடுவது தான் இதற்கு காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.தமிழகத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டு, அதை வீடியோ எடுத்து எவ்வித அச்சமும் இல்லாமல், அதை சமூக ஊடகங்களில் பதிவு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஒரு சில அரசு கல்லூரிகளில் நடக்கும் ஆண்டு விழா உள்ளிட்ட பிற நிகழ்வுகள் போலீஸ் பாதுகாப்புடன் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,’அரசு பள்ளிகளில் நன்னெறி வகுப்புகள் வாரத்துக்கு இரண்டு வேளைகள் உள்ளன. ஆனால், அவற்றை கணக்கு, அறிவியல், ஆங்கிலம் அல்லது சிறப்பு வகுப்புகளுக்காக பிற ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பிட்ட நன்னெறி வகுப்புகளில், நன்னெறி கருத்துக்களையோ அல்லது வாழ்க்கை கல்வியோ கற்றுக் கொடுப்பதில்லை. இதனால் வாழ்க்கையின் அடிப்படையான நியாய, அநியாய கருத்துக்களை கூட மாணவ, மாணவியர் தெரிந்துகொள்ள முடிவதில்லை. இது குறித்து கல்வித்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
இது குறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில்,’ கடந்த ஆண்டு, தமிழக அரசு பள்ளிகளில் நன்னெறி வகுப்புகள் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என, பள்ளி கல்வித்துறை சார்பில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இதில், உலக பொதுமறையாக உள்ள திருக்குறளில் இருக்கும் அறத்துப்பால், பொருட்பால் உள்ள, 105 அதிகாரங்களை உள்ளடக்கி ஆறு முதல் பிளஸ், 2 வகுப்பு வரை மாணவர்களுக்கு நன்னெறி கல்வி நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.அதில், திருக்குறளை வாழ்வியல் நெறியாக பின்பற்ற ஏதுவாக, நன்னெறி கல்வியை மாணவர்களுக்கு பள்ளிகளில் புகட்ட வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டன.பள்ளிகளில் நடக்கும் ஆண்டு ஆய்வு கூட்டங்களில் நன்னெறி கல்வியின் நீடித்த பயன் தரும் விளைவை விளக்கிட வேண்டும். திருக்குறளை நாள்தோறும் காலை வணக்க கூட்டத்தில் பொருளுடன் மாணவர்கள் கூற வேண்டும்.
மேலும், தமிழ் இலக்கிய மன்ற கூட்டங்களில் திருக்குறள் சார்ந்த கதை, கவிதை, நாடகம், வினாடி வினா ஆகியவற்றை திட்டமிட்டு பள்ளி அளவில் நடத்த வேண்டும்.
இது தவிர, பள்ளி அளவில், 100 குறட்பாக்களுக்கு அதிகமாக ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து, 200 ரூபாய் வழங்கி பாராட்ட வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இது மட்டுமல்லாமல், திருக்குறள் வழியிலான வாழ்வியல் நெறிகளை பின்பற்ற உரிய வழிகாட்டுதல்களை பள்ளியளவில் தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என, அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால், பள்ளிகளில் ஆசிரியர்களாகிய எங்களுக்கு தொடர்ந்து இருந்து வரும் நெருக்கடி, பணிச்சுமை ஆகியவற்றால் நன்னெறி வகுப்புகளில் முழுமையாக ஈடுபாடு காட்ட இயலவில்லை.
இதை ஆசிரியர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்பது இல்லாமல், ஒவ்வொரு மாணவ, மாணவியரின் பெற்றோரும், அவர்களை நல்லொழுக்க பாதையில் ஈடுபட செய்ய வேண்டும்.
சமுதாயத்துக்கும் அத்தகைய பொறுப்பு உள்ளது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்’ என்றனர்.
Leave a Reply