கோவை; கோவை பூ மார்க்கெட் முன் ரோட்டின் இரு புறமும், ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மேட்டுப்பாளையம் ரோடு சுருங்கியுள்ளது; வாகனங்கள் செல்வதற்கு திணறுகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் மற்றும் போக்குவரத்து போலீசார் அலட்சியமாக இருக்கின்றனர்.கோவை மாநகராட்சி, 72வது வார்டில் பூ மார்க்கெட் செயல்படுகிறது. கடந்தாண்டு ‘நமக்கு நாமே’ திட்டத்தில், வியாபாரிகளின் பங்களிப்பு தொகையுடன் புதுப்பித்துக் கட்டப்பட்டது. அதன் எதிர்புறம் மற்றொரு பூ மார்க்கெட் செயல்படுகிறது. இருப்பினும் கூட, ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமித்து கடைகள் போடப்படுகின்றன.

பூ மார்க்கெட்டில் ஒதுக்கீடு பெற்ற கடைக்காரர்கள், கடையை தாண்டி, ரோட்டை ஆக்கிரமித்து, விஸ்தரிப்பு செய்திருக்கின்றனர். 10 அடி வரை ரோட்டை ஆக்கிரமித்து, கூடாரத்தை நீட்டித்து, பூ மாலைகளை விற்பனைக்கு தொங்க விட்டிருக்கின்றனர். அப்பகுதியில் அமைந்துள்ள பஸ் ஸ்டாப்பில், இரண்டு பயணிகள் நிழற்குடைகள் வந்துள்ளன. அவை அமைந்துள்ள பகுதி வரை ஆக்கிரமிப்பு காணப்படுகிறது.இதேபோல், எதிர்திசையிலும் மலர் சந்தை வளாகத்தை ஒட்டி, ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் விரிக்கப்படுகின்றன. இதன் காரணமாக, ரோட்டின் இருபுறமும் சுருங்கியிருக்கிறது.
நுாறடி அகலமுள்ள இந்த ரோடு, 20 அடியே காணப்படுகிறது. பஸ்கள் செல்வதற்கு கூட திணறுகின்றன. மற்ற வாகனங்கள் ஊர்ந்து செல்லும் அளவுக்கு, ஆக்கிரமிப்புகள் அதிகமாகியுள்ளன. இதனால் சாலை விபத்துகளுக்கு குறைவில்லை.
ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டிய போலீசார், அப்பகுதியில் ‘நோ பார்க்கிங்’ என டிவைடர்கள் வைத்திருக்கின்றனர். மாநகராட்சி மேற்கு மற்றும் மத்திய மண்டல நகரமைப்பு பிரிவினர், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியமாக உள்ளனர்.
மாநகராட்சியும், காவல் துறையும் இணைந்து, பூ மார்க்கெட் முன்பு ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.
Leave a Reply